இது சூதாட்ட கிளப் இல்லை! – மிஷ்கின்…

Myskin at Nisaptham Audio Launch
மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மூத்த நடிகர் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், திருமதி கிருத்திகா உதயநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் நாயகனாக அஜய்யும், நாயகியாக அபிநயாவும் நடிக்கின்றனர். பேபி சாதனா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷான் ஜேசிஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவ்விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், தன்னுடைய படங்களின் தோல்வியை ஒப்புகொண்டார். இதுகுறித்து அவர் பேசும்போது,

“ஒரு படத்தின் டிரைலரை பார்த்தே அந்த படத்தின் வெற்றியை கணிக்க முடியாது. நான் ‘முகமூடி’ படத்தை எடுத்து முடித்து டிரைலரை பார்க்கும்போது, அந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆகும், நான் ஹாலிவுட் வரை செல்வேன் என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

அதேபோல், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை எடுத்து மூன்றரை கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டபிறகு, என்னால் 40 நாட்கள் வெளியே வரவே முடியவில்லை. ஆனால், அதற்காக என்னுடைய தன்னம்பிக்கையை கைவிடவில்லை. அதைத் தொடர்ந்து நான் போரடினேன். பாலா என்ற ஒரு கலைஞன் என்னை அழைத்து பிசாசு என்ற படத்தை பண்ண வைத்தார். அந்த படம் மூலம் நான் மீண்டும் எழுந்து நின்றேன். தோல்விகளை கண்டு கலங்கவே கூடாது.

நீங்கள் முதல் அடியை எடுத்து வைத்தபிறகு, திரும்பிப் பார்க்கவே கூடாது. அடுத்த அடி போய்க்கொண்டுதான் இருக்க வேண்டும். ஒரு படம் தோல்வியடைகிறேதோ, வெற்றியடைகிறதோ என்று கவலைப்படாமல் அடுத்த படம் பண்ணப்போறோம் என்று நினைத்துக் கொண்டுதான் நகர வேண்டும்.

என்னுடைய மிகச்சிறந்த படங்களே என்னுடைய ஓடாத படங்கள்தான். அது, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும். படம் எடுக்க வருகிறவர்கள் ரொம்பவும் தெளிவாக இருக்கவேண்டும். 100 ரூபாய் போட்டால் 400 ரூபாய் கிடைக்கும் என்பதற்கு இது சூதாட்ட கிளப் இல்லை. கயிறு மேல் நடப்பதுபோல்தான் சினிமா. கீழே விழுந்தால் மரணம்தான். ஆனால், இந்த மரணத்தில் நிறைய பேர் கைபிடிக்க வருவார்கள். ஆகையால், வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து செல்லக்கூடாது.

சினிமா என்பது சாதாரண காடு கிடையாது. பயங்கரமான, மோசமான காடு. இதில், பல காண்டா மிருகங்களும், பல பிசாசுகளும் ஒளிந்திருக்கும். நீங்கள் நடந்து போக பாதை இருக்கும், வெளிச்சம் இருக்கும். ஆனால் நடந்து போகவே முடியாது. அவை எல்லாமே புதைகுழிகள்தான். மனசை திடப்படுத்திக்கொண்டுதான் இதில் பயணிக்க வேண்டும்” என மிஷ்கின் ‘நிசப்தம்’ திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசினார்.

Leave a Response