பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை எதிர்த்து வழக்கு – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு:

O Panneerselvam TN CM
கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டிவருகிறது. கேரள அரசின் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அவர் கூறியதாவது, “காவிரியின் கிளை நதியாகிய பவானி ஆற்றின் குறுக்கே கேளர அரசு ஆறு தடுப்பணைகளைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் அனுமதி பெறாமல் அத்துமீறி கட்டப்படும் இந்த அணைகள் மூலம் 15,000 ஏக்கர் பரப்பில் புதிய பாசனத் திட்டதை உருவாக்க அம்மாநில அரசு முயல்கிறது.

தேக்குவட்டை, மஞ்சிகண்டி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டபோது தமிழக அரசு கேரள அரசின் இந்த அத்துமீறலைக் கண்டித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டி, உடனடியாக அணை கட்டும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசை எதிர்த்து இன்னும் 2 நாட்களில் வழக்கு தொடரப்படும்.” என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Leave a Response