மாதவனும் – விஜய்யும் இணையும் புதிய படம்….

Madhavan_Vijay New Movie
‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகர் மாதவன். இவர் தற்போது இந்திய திரையுலகின், குறிப்பாக இந்தி திரையுலகின் பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் ‘பிரமோத் பிலிம்ஸ்’ தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ‘பிரமோத் பிலிம்ஸ்’ சார்பாக பிரத்தீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். உலகளவில் பிரசித்தி பெற்ற ‘லவ் இன் டோக்கியோ’, ‘ஜுக்னு’ போன்ற இந்தி திரைப்படங்களை ‘பிரமோத் பிலிம்ஸ்’ தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவை மேற்கொள்ள, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். மாநில விருது பெற்ற கலை இயக்குநர் ஜெயஸ்ரீ இப்படத்தின் கலையை கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் பிரத்தீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தங்களுடைய பத்ரிக்கையரிக்கையில் தெரிவித்திருபதாவது, “1958 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தி திரையுலகின் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் எங்களின் பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது முதல் முறையாக தமிழ் திரையுலகில் தலைச்சிறந்த நட்சத்திர கூட்டணியோடு கால் பதிக்க இருப்பது, மிகவும் பெருமையாக இருக்கின்றது. மாதவன் சார் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு பொருத்தம், நிச்சயமாக தமிழக ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. திரைப்படத்தை இயக்குவது என்பது ஒரு கலை. அந்த கலையில் கைதேர்ந்த இயக்குநர் விஜய் சாரோடு நாங்கள் கைக்கோர்த்து இருப்பது அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் பங்களிப்பு, எங்கள் படத்திற்கு பக்கபலமாய் இருக்கும். வருகின்ற மார்ச் மாதத்தில் எங்கள் படத்தின் படப்பிடிப்பை ஊட்டி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் தொடங்க இருக்கின்றோம்” என்று உற்சாகமாக கூறுகின்றனர், தயாரிப்பாளர்கள் பிரத்தீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா.

Leave a Response