அதே கண்கள் திரைப்பட விமர்சனம்:

Adhey Kangal Tamil Movie Review
கலையரசன், ஜனனி ஐயர், சிஷ்வதா, பால சரவணன், ‘ஊமை விழிகள்’ அரவிந்தராஜ் மற்றும் பலர் நடித்திற்கும் புதிய திரைப்படம் ‘அதே கண்கள்’. இப்படத்தை திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பாக சி.வி.குமார் தயாரித்துள்ளார், புதுமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இசையை ஜிப்ரான் அமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பை செய்துள்ளார். காட்சிகளை ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பார்வையற்றவராக படத்தில் அறிமுகமாகும் கலையரசன் பயணிக்கும் காதல் கதை எவ்வாறு ஒரு த்ரில்லர் கதையாக பயணிக்கிறது என்பது தான் கதையின் சாரம்சம். கலையரசன் தான் நடத்தும் ஒரு உணவு விடுதியில் ஒரு பார்வையற்ற செப்பாக(Chef) பணியாற்றிகிறார். ஜனனி ஐயரும் கலையரசனும் சிறு வயதிலிருந்து நண்பர்களாக பழகி வருகின்றனர். இரவு உணவகத்தை அடைக்கும் வேளையில் என்ட்ரி ஆகிறார் சிஷ்வதா. கலையரசன் மற்றும் சிஷ்வதா இருவருக்குள் ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது, அதை கண்டு ஜனனி ஐயர் மனமுடைகிறார்.

ஒரு நாள் எதிர்பாராத விபத்தில் கலையரசன் சிக்கி, சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சிஷ்வதாவிற்கு கலையரசன் பண உதவி செய்வதாக கொடுத்த வாக்குறுதி அவர் மருத்துவமனையில் இருந்ததினால் சற்று தவறுகிறது. சிஷ்வதாவிற்கும் கலையரசனுக்கும் இடையில் ஒரு இடைவேளை அமைய மீண்டும் எவ்வாறு சந்திக்கின்றனர் என்பது தான் கதை.

இந்த காதலில் எங்கு வருகிறது த்ரில்லர் என யோசிக்கிறீர்களா? சொல்லிவிட்டால் அப்புறம் நீங்க திரைக்கதை எழுதி இயக்கிடுவீங்க!

சிஷ்வதாவிற்கு பணம் உதவி செய்ய முற்படும் கலையரசன் எவ்வாறு சிக்கி தன்னுடைய பணத்தை இழக்கிறான், சிஷ்வதாவை எவ்வாறு கண்டுபிடிக்கிறான் என்பதை இயக்குனர் ஒரு கோர்வையாக திரைக்கதை அமைத்துள்ளார்.

பார்வையற்றவனாக கலையரசன் நன்றாக நடித்துள்ளார். ஜனனி ஐயர் எப்போதும் போல் அதே நடிப்பு. அரவிந்தராஜ் நடிப்பை பற்றி பெரியதாக சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. பால சரவனணனின் நகைச்சுவை மற்றும் நடிப்பு கசப்பு தட்டாமல் கதைக்கு கச்சிதமாக உள்ளது. ‘நெடுஞ்சாலை’ மற்றும் ‘ஜீரோ’ படங்களில் கதாநாயகியாக நடித்த சிஷ்வதா தான் படத்தின் ஒரிஜினல் ஹீரோ. என்ன ஒரு ஈர்ப்பு அவரிடம்…நடிப்பு பிரமாதம்….ஆக்ஷன் அட்டகாசம்….பார்வையால் ஒவ்வொரு ரசிகனையும் தன் பக்கம் இழுக்கிறார்….சிஷ்வதாவிற்கு கண்டிப்பாக தமிழ் திரையுலகில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து கலக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஜிப்ரான் இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ரவிவர்மன் நீலமேகம் கதைக்களத்திற்கு ஒத்து போகும் வகையில் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். லியோ ஜான் பால் படத்தொகுப்பை கதைகேற்றாற்போல் கச்சிதமாக கத்திரித்துள்ளார். மொத்தத்தில் படத்தில் எந்த வகையிலும் எரிச்சில் ஊட்டும்படியான கொச்சை அல்லது இரட்டை அர்த்த வசனங்கள், இரத்த வாடை என எந்த அருவெறுப்பும் இல்லாத வகையில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இயக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேசன்.

பட்டத்தை தயக்கமின்றி குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

Leave a Response