ஆதாரங்கள், லதா ரஜினிகாந்த் மீடியா ஒன் நிறுவனத்தில் இயக்குனராக இருந்ததை நிரூபிக்கின்றன:

சில தினங்களுக்கு முன்பு மீடியா ஒன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முரளி மனோகர், ஊடகங்களின் முன்பாக ‘கோச்சடையான்’ பட விவகாரம் குறித்து பேசும்போது, லதா ரஜினியின் பெயரை இதில் இழுக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் இந்த விவகாரத்தில் லதா ரஜினியின் பங்கு என்ன என்றும் அவர் மீடியா ஒன் நிறுவனத்துக்காக ஜாமீன் கொடுக்க வேண்டிய தேவை என்ன என்றும் கேட்டோம்.

அதற்கு அவர், “லதா ரஜினி ஜாமீன் கொடுத்தது மீடியா ஒன் நிறுவனத்துக்கு லோன் கிடைக்கவேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் மட்டுமே” என பதிலளித்தார். ஆனால் அதன்பிறகு உண்மை விஷயங்கள் என்ன என கண்டுபிடிக்க நாம் களத்தில் இறங்கியபோது, லதா ரஜினி ஏற்கனவே அதாவது பிப்ரவரி 18, 2013 தேதியில் மீடியா ஒன் நிறுவனத்தில் டைரக்டராக இருந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய DIN எண் 00168069 ஆகும்.

இன்னொரு கூடுதல் தகவலாக, தான் இயக்குனராக உள்ள ஆக்கர் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக முரளி மனோகரை நியமிக்கும் அளவுக்கு லதா ரஜினியும் முரளிமனோகரும் நெருங்கிய வியாபார தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் கடந்த பிப்ரவரி 22, 2011 முதல் டிசம்பர் 23, 2014 வரை முரளி மனோகர் அதிகாரப்பூர்வமாக ஆக்கர் ஸ்டுடியோவில் பணியாற்றியிருக்கிறார் என்பது நிதர்சனமாக தெரிகிறது..

ஆக, மேற்கூறிய விபரங்கள் அனைத்தையும் வைத்து பார்க்கும்போது ‘கோச்சடையான்’ பட விவகாரத்தில் லதா ரஜினி தலையீடு என்பது வெறும் நல்லெண்ண அடிப்படையில் மட்டும் அல்ல என்பதும், முழுக்க முழுக்க வியாபார நோக்கத்தில் தான் என்பது நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே தான் லதா ரஜினி மீடியா ஒன் நிறுவனத்திற்கு உதவியாக ஜாமீன் அளித்துள்ளார் போல் தெரிகிறது. ஆனால் ‘கோச்சடையான்’ பட வியாபாரத்தில் லதா ரஜினியின் மறைமுக பங்கு பற்றிய உண்மையை சிதம்பர ரகசியமாக ஒளித்துவைக்க வேண்டிய காரணம் என்ன என்பதுதான் இப்போது நம் முன் பூதாகரமாக எழும் கேள்வி.

Form 32 - Latha Rajnikanth

Form 32 - Murali Manohar

MCA21  __Register DSC_ View Signatory Details - Ocher Studios