முத்துக்கள் மூன்று..! ஆனால் முதலில் வருவது எது..?

கமல் வருடத்திற்கு ஒன்று, அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒன்று என படம் கொடுத்தபோது அவரது அடுத்த படத்திற்காக ஏங்கிக்கொண்டு இருந்தோம்.. ஆனால் அவரே தனது விதிகளை எல்லாம் தளர்த்தி இப்போது மூன்று படங்களை நடித்து முடித்து விட்டார். ஆனால் ஒன்றிற்கு கூட ரிலீஸ் தேதி எப்போது என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது.

‘விஸ்வரூபம்-2’ ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம். ஆனால் அவர்களோ ‘ஐ’ படத்தை ரிலீஸ் செய்துவிட்டுத்தான் மற்ற வேலை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ‘ஐ’ படம் வெளியாகி இரண்டு மாதங்கள் கழித்து தான் ‘விஸ்வரூபம்-2’வை ரிலீஸ் பண்ணுவதாக அவர்களது திட்டம்.

‘த்ரிஷ்யம்’ ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடப்பதால், பிப்ரவரிக்கு முன் அந்தப்பட ரிலீஸை பற்றிய பேச்சே இல்லை என்று சொல்லிவிட்டார்களாம் அதன் தயாரிப்பாளர்கள். ஆனால் ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு முன்பே ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் சொல்லி விட்டார்கள்.

சரி.. ரமேஷ் அரவிந்தின் ‘உத்தம வில்லன்’ தயாராக இருக்கிறது, அதை ரிலீஸ் செய்யலாம் என்றால் டிசம்பரில் ‘லிங்கா’வும் கிறிஸ்துமஸ் தினத்தில் நான்கு படங்களும் பொங்கலுக்கு ‘ஐ’ மற்றும் அஜித் படங்களும் ரிலீசாகின்றன என்பதால் அதையும் தள்ளிவைத்துவிட்டார்கள்..

அப்படி என்றால் கமலின் எந்தப்படம் தான் முதலில் வெளிவரும்..? முத்தான மூன்று படங்களை ரிலீஸ் செய்வதில் இப்படி தாமதம் ஏற்பட்டால் அது வெற்றியின் சதவீதத்தை பாதிக்காதா..? மொத்தத்தில் ரசிகர்களை மகிழ்விக்க கமல் வரிசையாக தொடர்ந்து நடிப்பதுதான் குற்றமா..? பதில் சொல்வது யார்..?