அரசுப் பள்ளியில் நடந்த மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்த ஆசிரியர் சங்கரின் பின்னணி என்ன?
எத்தனை பேர் தடுத்தாலும், தனக்கு எதிரே இருப்பவர் யாராக இருந்தாலும் மாணவ, மாணவிகளின் நலனுக்கான குரல் கொடுத்த இந்த தமிழ் ஆசிரியர்தான், இந்த நாளின் சூப்பர் ஹீரோ. சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய மகாவிஷ்ணு என்பவர் அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கை சார்ந்த விசயங்களையும் பாவப் புண்ணியங்கள் குறித்தும் பேசியது, அங்கிருந்த சில ஆசிரிய, ஆசிரியைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதால் பலரும் மவுனம் காத்தனர். அப்படியெல்லாம் அனைவரையும் போல் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று வெகுண்டெழுந்த தமிழ் ஆசிரியர் சங்கர், விழிப்புணர்வு நிகழ்ச்சியா இல்லை ஆன்மிக நிகழ்ச்சியா என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு நேரடியாக பதிலளிக்க முடியாத மகா விஷ்ணு, தப்புனா என்னை எதுக்கு பேச அழைக்கிறீர்கள் என்று கைகளை கட்டிக்கொண்டு ஹீரோயிசம் காட்டினார். ஆனால் சற்றும் அசராத ஆசிரியர் சங்கர், பள்ளியில் ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றும் இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும் தனது குற்றச்சாட்டில் உறுதியாக நின்றார்.
இதனால் கடுப்பான மகா விஷ்ணு, சட்டத்துல இருக்கா என்றும் முதன்மை கல்விக்கு மேல் அறிவு பெற்றவாரா நீங்கள் என்றும் ஆசிரியர் சங்கரை மிரட்டும் தோணியில் சம்பந்தமே இன்றி பேச தொடங்கினார். இந்த வீடியோக்களை, கெத்து காட்டுவதாக எண்ணி தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார் மகாவிஷ்ணு. அது அவருக்கே வினையாகும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஸ் வரை சென்றடைந்தது.
இதன்பிறகு சர்ச்சைக்குள் சிக்கிய மற்றொரு அரசுப்பள்ளியான அசோக் நகர் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்பில் மகேஸ், அங்கு ஆசிரியர் சங்கரை அழைத்து சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் மேடையில் தனக்கு அருகே அவரை அமர வைத்த அமைச்சர், ஆசிரியர் சங்கர் கற்ற கல்விதான் பிற்போக்கு சிந்தனைகளுக்கு எதிராக கேள்விக் கேட்க வைத்துள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என் துறையில் எங்க ஆசிரியரை அவமானப்படுத்தியவரை சும்மா விடமாட்டேன் என்றும் அதிரடியாக பேசினார். மேலும், வழக்குப்பதியலாம் என்று கேட்டபோது, ஆசிரியர் பெருந்தன்மையாக மறுத்துவிட்டதையும் அமைச்சர் அன்பில் மகேஸ் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், கேள்வி கேட்ட போது, உங்கள் பெயர் என்ன என்று மகாவிஷ்ணு கேட்டதன் சூட்சமத்தை தாம் உணர்ந்துக்கொண்டு பேசியதாக ஆசிரியர் சங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளி அமைப்பினர், பார்வை மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கரை அவமதித்ததாக மகா விஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சங்கத்தினர் புகார் தந்துள்ளனர்.