கிரண்பேடி கலந்துகொண்ட ‘திகார்’ இசைவெளியீட்டு விழா சுவராஸ்யங்கள்..!

‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ன்னு விஜய், அஜித்தை வைத்து சூப்பர்ஹிட் படங்களை தந்தவர் டைரக்டர் பேரரசு. தமிழில் சமீபகாலமாக அவர் டைரக்‌ஷனில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை. அதனால் மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் தந்தே தீருவது என்ற வைரக்கியத்துடன் தற்போது ‘திகார்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் பேரரசு.

இது மலையாளத்தில் மம்முட்டி நடித்து 22 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சாம்ராஜ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் நகரத்தையே நடுநடுங்க வைத்து போலீஸ், சட்டம் என எதையும் மதிக்காமல் வாழும் மிகப் பெரிய டான் அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

இன்னொரு நாயகனாக  மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அகன்ஷா பூரி, கிருதிபாபட் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் கே.ஜெயன், ரியாஸ்கான், தேவன், ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை மிகவும் சிறப்பாக, அதேசமயம் வித்தியாசமான முறையில் நடத்தினார் இயக்குனர் பேரரசு. அதாவது சிறை என்றாலே நமக்கு ஞாபத்துக்கு வரும் சுதந்திரப்போராட்டத்திர்காக சிறைசென்ற செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களது பேரன் சிதம்பரத்தையும் திகார் சிறை என்றாலே உடனே ஞாபகத்திற்கு வரும் கிரண்பேடி ஐ.பி.எஸ்ஸையும் இந்த விழாவிற்கு அழைத்து வந்து இசைத்தகட்டை வெளியிட வைத்தார்.

இந்த விழாவில் பேசிய கிரண்பேடி, தான் திஹார் சிறைச்சாலை பற்றி எழுதிய நூலை தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் வரவேற்பேன் என கூறினார்.. அத்துடன் அந்த நூலை ஆய்வு செய்தால் அதில் சினிமாவுக்கான ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவும் கூறினார். உடனே நடிகர் பார்த்திபன் தான் கிரண்பேடியின் நூலை மொழிபெயர்க்க பொறுப்பு எடுத்துக்கொள்வதாகவும் 2௦15க்குள் அந்த நூலை கிரண்பேடியின் கையாலேயே வெளியிடுவதாகவும் உறுதி அளித்தார்.

அதை வழிமொழிந்த பேரரசு, “பார்த்திபன், நூலை மொழி பெயர்க்கட்டும், அதை படமாக இயக்குவதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என தன பங்குக்கு உறுதி அளித்தார். இதைவிட ஹைலைட்டாக அமைந்த விஷயம் திஹார் சிறையில் சில நாட்கள் விருந்தினரனாக(!) தங்கி வந்த பவர்ஸ்டார் சீனிவாசன் இந்த விழாவில் கலந்துகொண்டு தனது பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தது தான்.