ஆள் – விமர்சனம்

சிக்கிம் மாநிலத்தில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார் அமீர் (விதார்த்). தாய், தங்கை, தம்பி மாறும் காதலி அனைவரும் சென்னையில் இருக்கிறார்கள். ஒரு நாள் கல்லூரி வளாகத்தில் நாலைந்து மாணவர்கள் ரிஸ்வான் கான் என்னும் தமிழ் இஸ்லாமிய மாணவனை மூர்க்கமாக அடிப்பதைத் தடுக்கிறார்..

இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காகவே ஒடுக்கப்படுவதை தடுக்க, ஜிகாத் (புனிதப் போர்) மட்டும்தான் ஒரே தீர்வு என விரக்தியோடு சொல்லும் ரிஸ்வானைச் சமாதானப்படுத்தி தன் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறார் அமீர். தன காதலியின் அப்பாவை சந்தித்து பென் கேட்க சென்னைக்குப் புறப்படுகிறார் அமீர்.

ரிஸ்வான் மூலமாக அமீரை பற்றிய தகவல்களை திரட்டி, சென்னை விமான நிலையத்தில் இறங்கியது முதல் ஒருவன் மொபைல் போன் மூலமாகவே அவரை மிரட்டுகிறான். அமீரின் குடும்பத்தினரைப் பணயக் கைதிகளாக வைத்து மிரட்டி அமீரை தீவிரவாதத்தை கையிலெடுக்கவும் பல கிரிமினல் காரியங்களைச் செய்யவும் வற்புறுத்துகிறான். அமீர் அவனுக்கு அடிபணிந்தாரா? அல்லது எதிர்த்துப் போராடி வென்றாரா என்பதே படம்.

மைனா விதார்த் இந்தப்படத்தின் மூலம் தன் நடிப்பில் அடுத்த கட்டத்தை தொட்டிருக்கிறார். சென்னையின் தெருக்களில் அவர் இலக்கின்றி பித்துப்பிடித்தவன் போல அலைவது அவர்மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் தன் மனத் தடுமாற்றத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

படத்திற்கு கூடுதல் பரிமாணம் சேர்க்கின்றன ஜோஹனின் பின்னணி இசையும், என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவும். ஹீரோயின் ஹார்திகா ஷெட்டி ஜஸ்ட் லைக் தட் வந்துபோவதால் அவரின் நடிப்பைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

தீவிரவாதக் கொள்கை கொண்ட ஒரு இஸ்லாமியனும், அமைதியான வாழ்க்கை முறையை வாழ நினைக்கும் ஒரு எளிய இஸ்லாமியனும் தங்கள் மதத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதே முழுப்படமும். ஆனால் அதை மதக் கலவரம், குண்டு வெடிப்பு என இரத்தம் தெறிக்கும் காட்சிகளின் மூலம் சொல்லாமல் ஆனால் அழுத்தமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆனந் கிருஷ்ணன். பல இடங்களில் வெறும் தேடல், ஓடல் காட்சிகளாகவே ரிப்பீட் ஆவதை தவிர்த்திருந்தால் ‘ஆள்’ இன்னும் பலம் பெற்றிருப்பான்..