அமரகாவியம் – விமர்சனம்

குளுகுளு ஊட்டி.. அழகான இரண்டு இளம்சிட்டுகள். பள்ளிசெல்லும் பருவத்தில் காதல் அரும்புகிறது. காதலியின் பெற்றோரின் எதிர்ப்பு குறுக்கிடுகிறது.. காதலியை அழைத்துக்கொண்டு ஊர் மாற்றுகிறார்கள். இறுதியில் காதலியை கண்டுபிடிக்கிறான் காதலன்.. அவள் தன்னை விட்டு போய்விடுவாளோ என கலக்கத்தில் காதலன் எடுக்கும் முடிவுதான் கிளைமாக்ஸ்..

காதலர்களாக சத்யா, மியா.. காதல் காட்சிகளில் சத்யா கோட்டை விட்டாலும் மூர்க்கமான காட்சிகளில் சோபிக்கிறார். பள்ளி மாணவி என்பதை தாண்டி, சற்றே முதிர்ச்சியாக தெரிந்தாலும் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள மியா, துறுதுறுவென நம்மை கவர்கிறார்.. தியேட்டருக்கு வரும் ரசிகனை படம் முழுவதும் பொறுமையாக அமரவைக்கும் அழகு, நடிப்பு என இரண்டிலுமே சாதித்திருக்கிறார் மியா..

80களில் நடந்த உண்மைக்கதை என்று முன்னாலேயே இயக்குனர் சொல்லிவிட்டதால் அதைப்பற்றி நாம் கேள்வி கேட்க முடியாது.. ஆனால் படத்தின் முக்காலே மூணு சதவீதம் ஏற்கனவே பலமுறை பார்த்த காதல் பிரச்சனையைத்தான் சொல்கிறது. க்ளைமாக்ஸில் நாயகனின் முடிவு எதிர்பாராததாக இருந்தாலும் ஜீரணிக்க கஷ்டமான ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் காதலர்களை கவரும் விதத்தில் படமாக்கியதில் தப்பிக்கிறார் இயக்குனர் ஜீவாஷங்கர்..