பட்டைய கிளப்பணும் பாண்டியா – விமர்சனம்

மினி பஸ் ட்ரைவரான விதார்த் அதில் பயணம் செய்யும் மனிஷா யாதவை காதலிக்கிறார். ஆனால் அவரோ விதார்த்தின் காதலை ஏற்க மறுக்கிறார்.. காரணம் என்ன என்பதையும் அவர் காதலை ஏற்றாரா என்பதையும் காமெடி, கலாட்டா, செண்டிமெண்ட் என கலந்துகட்டி சொல்லியிருக்கிறார்கள்..

விதார்த்திற்கு கிடைத்திருப்பது ஜாலியான, அதேசமயம் ஒரு பக்குவப்பட்ட கதாபாத்திரம்.. அதில் கச்சிதமாக ஸ்கோர் செய்கிறார். கூடவே வரும் தோழி அடக்க ஒடுக்கமாக சேலை அணிந்திருக்க, கதாநாயகி என்பதற்காகவே தான் மட்டும் தொப்புள் தெரிய சேலைகட்டும் நர்ஸாக மனிஷா யாதவ்.. ஆனால் விதார்த் உருகி உருகி காதலிக்கும் அளவுக்கு ஒர்த் இல்லையே பாஸ்..

மொத்த படத்தையும் தாங்கி பிடிப்பவர் சூரி தான்.. தன்னை நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகனை 70 சதவீதம் திருப்திப்படுத்தி அனுப்புகிறார்.. கிட்டத்தட்ட அவர்தான் கதாநாயகன் என்றே சொல்லலாம்… கூடவே இமான் அண்ணாச்சியும் இளவரசுவும், கோவை சரளாவும் தங்களது வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள். கதையை எதிர்பார்க்காமல் காமெடிக்காக வருபவர்களை குறிவைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.