பொறியாளன் – விமர்சனம்

ஆறேழு வருடங்களுக்கு முன் வந்த ‘பொய் சொல்லப்போறோம்’ படத்தையும் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ‘நேரம்’ படத்தையும் மிக்ஸ் பண்ணி அதுக்கு கன்ஸ்ட்ரக்சன் பிளேவர் கொடுத்தால் அதுதான் இந்த ‘பொறியாளன்’.

புதிதாக கன்ஸ்ட்ரக்சன் ஆரம்பிக்கும் ஹீரோ ஹரிஷ் கல்யாண் நண்பனிடம் 2 கோடி ரூபாய் கடன் வாங்கி ஒரு இடத்தை வாங்கிப்போடுகிறார். நண்பன் கொடுத்த பணம் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தாதாவுடையது. அவர் ஜெயிலுக்கு போய் வருவதற்குள் அந்தப்பணத்தை திருப்பி வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் கொடுக்கிறார் நண்பன்.

ஆனால் ஹரீஷ் வாங்கிய இடமோ இன்னொருவருக்கு சொந்தமானது. தன்னை ஏமாற்றிய புரோக்கரை கண்டுபிடித்து அந்த 2 கோடியை மீட்க அலைகிறார் ஹரீஷ்.. அதற்குள் ஜெயிலில் இருந்து வெளிவரும் தாதாவிடம் மாட்டிக்கொள்கிறார் நண்பன்.. இனி என்ன ஆகும் என்பதுதான் க்ளைமாக்ஸ்..

நாயகன் ஹரீஷ் கல்யாண், நாயகி ரக்ஷிதா, வில்லன்கள் அச்சுதகுமார், புரோக்கர் மோகன்ராமன், மாமா மயில்சாமி, பிரின்சிபால் டெல்லிகணேஷ் எல்லோருமே நல்ல ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கு பாடல்கள் தான் அவ்வப்போது வேகத்தடை போடுகின்றன.

இன்றைக்கு நடைபெறும் நில மோசடியையும் கந்துவட்டி கொடுமையையும் வைத்து அது ஒரு பொறியாளனின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் உதயம் என்.ஹெச்-4 மணிகண்டன்.. அதை சூடு குறையாமல் பரிமாறியிருக்கிறார் இந்தப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் தாணுகுமார். ஆனால் ஒரு பொறியாளனின் தொழில் போராட்டத்தை, அவனது களத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை படமாக்கி இருந்தால் கொஞ்சம் நேர்மையாக இருந்திருக்கும்..