சின்ன பட்ஜெட்டில் பிரபல நடிகர்கள் இல்லாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி இருக்கும் படம் தான் ‘சண்டியர்’. ஆனால் கிராமத்தில் அரசியலின் பெயரால் சண்டியராக சுற்றும் பொலிகாளைகளுக்கு சவுக்கடி கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறது இந்த ‘சண்டியர்’.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் தான் கதைக்களம்.. நீண்ட நாட்களாக மாமன் மச்சான் என நட்பாக பழகி வரும் இரண்டு பெரியவர்களின் பையன்கள் சேர்மன் பதவிக்காக மோதிக்கொள்கிறார்கள். அதில் ஒளிந்திருந்திருக்கும் வன்மம், துரோகம், பொறாமை யாருக்கு எந்த பதவியை தந்தது என்பதை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.
கிராமத்து சண்டியராக புதுமுகம் ஜெகன்.. சரியான தேர்வு.. ஹீரோ, ஆண்ட்டி ஹீரோ, வில்லன் என மூன்ன்று பரிமாணங்களையும் பிசிறில்லாமல் மிகையில்லாத நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது போட்டியாளராக வரும் சேர்மன் நாயகமும் இன்னொரு சண்டியராக மிரட்டுகிறார்.
கிராமத்து அழகுடன் வலம் வரும் கதாநாயகி கயல், அரசியல் சூழலில் சிக்கி காதலில் தவிப்பதை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.. வசனம் பேசும்போது லட்சுமி மேனனின் சாயல் தெரிகிறது என்றாலும் அதுவும் ப்ளஸ்ஸாகவே இருக்கிறது.
ஜெகனின் தந்தையாக ஜெயகாந்தனின் உருவ அமைப்புடன் அரசியல் வேதாந்தியாக வரும் பெரியவரும், நாயகத்தின் தந்தையாக நல்லவர் போல நடித்து குள்ளநரித்தனம் காட்டும் பெரியவரும் இந்தபடத்திற்கு மிகப்பெரிய பலம். ஆடுகளம் முருகதாஸ்தான் எந்த கேரக்டர் என்றாலும் அப்படியே மாறிவிடுகிறாரே.. டயலாக் காமெடிக்கு சிங்கம்புலி.. அவர் மட்டும்தான் அவ்வப்போது சோதனை செய்கிறார்.
கதாநாயகன் அன் கோவை என்கவுன்ட்டர் செய்ய சுற்றி வளைக்கும் போலீசார் அவர்கள் தப்பித்த பின்னர் வரும் காட்சிகளில் அவர்களை சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதில் லாஜிக் இடிக்கிறது.
கதாநாயகனுக்கு ‘களவாணி’யையும் அரசியல் கதைக்கு சுப்ரமணியபுரம் படத்தையும் இன்ஸ்பிரேஷனாக எடுத்திருந்தாலும் அரசியல் கொலைகள் கீழ்மட்ட அளவில் ஏன் நடக்கின்றன என்பதை தஞ்சையை கதைக்களமாக வைத்து ரொம்பவே டீடெய்லாக சொன்னதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சோழ தேவன்.
இயக்குனர் சோழதேவனுக்கு ஒரு பொக்கே கொடுத்து வரவேற்போமே..!



