திருட்டு வி.சி.டி’க்கு எதிராக படைதிரட்டும் ‘தகடு தகடு’..!

இன்று சினிமாவை, குறிப்பாக தமிழ் திரையுலகை கதிகலங்க வைக்கும் பிரச்சனைதான் திருட்டு விசிடி. ‘அயன்’ படத்தில் கூட திருட்டு விசிடி விற்பதை காட்டினார்களே தவிர அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் திருட்டு விசிடி கும்பலை மையப்படுத்தியும் அதை ஒழிக்கும் முறை பற்றியும் ஒரே படமே எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் பெயர் ‘தகடு தகடு’. சத்யராஜின் சூப்பர்ஹிட் டயலாக் தான். படத்தை துபாய் தமிழரான ‘வெண் கோவிந்த் தயாரித்திருக்கிறார்.. படத்தை இயக்கியிருப்பவர் தஞ்சை தமிழரான ராகேஷ். இவர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இயக்குனர் சற்குணத்தின் ஊர்க்காரரும் கூட. பா.விஜய் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், சத்யராஜ், டி.ராஜேந்தர், ஜெயம் ரவி, இயக்குனர் சற்குணம் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய டி.ராஜேந்தர், சத்யராஜ், எடிட்டர் மோகன், ரவிமரியா உட்பட பலர் திருட்டு விசிடியை ஒழிக்கவேண்டும் என ஆவேசமாக பேசினார்கள். முப்பது நிமிடங்களுக்கு மேல் பேசிய டி.ஆர் ரசிகர்களின் கைதட்டலை இடைவெளி இல்லாது அள்ளிக்கொண்டே இருந்தார். இந்தப்படம் வந்தால் எப்படி திருட்டு விசிடி கும்பலை ஒழிக்கலாம் என்பதை பார்க்க ரசிகர்களுடன் நாமும் ஆவலாக இருக்கிறோம்.