பப்பாளி – விமர்சனம்:

பிளாட்பாரத்தில் சாப்பாட்டுக்கடை நடத்தும் இளவரசுக்கு எப்படியாவது ஒரு ஹோட்டலின் முதலாளி ஆகவேண்டும் என்பது ஆசை. அதற்காக தனது மகன் மிர்ச்சி செந்திலை இன்னொரு ஹோட்டல் முதலாளியின் மருமகனாக்க முயற்சிக்கிறார்.

ஆனால் செந்தில் ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புகிறார். அது மட்டுமல்ல ஈ.பியில் வேலைபார்க்கும் ஆடுகளம் நரேனின் மகளான துஷாராவை காதலிக்கிறார். இதற்கு இளவரசு எதிர்ப்பு தெரிவிக்க, துஷாராவின் அம்மா சரண்யாவும் அப்பா நரேனும் செந்திலுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்து அவரது ஐ.ஏ.எஸ் லட்சியம் நிறைவேற உறுதுணையாக நிற்கிறார்கள். அப்பாவின் எதிர்ப்பை மீறி செந்தில் தனது லட்சியத்தை அடைந்தாரா என்பதுதான் கதை..

மருமகனை ஐ.ஏ.எஸ் படிக்கவைக்க முழுமூச்சாக உழைக்கும் மாமனார் குடும்பம் தமிழ்சினிமாவுக்கு புதுசு. அதை சரண்யாவும் நரேனும் மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள். செந்தில் இடைவேளை வரை வெறுப்பேற்றிவிட்டு இடைவேளைக்குப்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். கதாநாயகி துஷாரா பெரிய அளவில் நம்மை கவரவில்லை என்றாலும் உறுத்தவும் இல்லை.

செந்திலின் அப்பாவாக கோபமும் ஆதங்கமும் காட்டும் இளவரசு எதார்த்தமான தெற்கத்தி சீமைக்காரர். மகனின் மீது வெறுப்பை கொட்டும்போது கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும் அவரது கதாபாத்திரத்தின் தன்மை அது என்பதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
சிங்கம்புலியின் டீசன்ட்டான காதல் அப்ரோச் காமெடி முதலில் கடுப்படித்தாலும் பின் நம்மை அறியாமல் அவரை ரசிக்க வைத்து விடுகிறார். ஜெகனும் அப்படியே.. அருமையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு இடைவேளை வரை அந்தப்பக்கம் போகாமலேயே நம் பொறுமையை சோதித்ததற்காக இயக்குனர் கோவிந்த மூர்த்தியின் மேல் கோபம் ஏற்பட்டாலும் இடைவேளைக்குப்பின் நம் கோபத்தில் தண்ணீர் ஊற்றி நம்மை குளிர்வித்து விடுகிறார். நல்ல கதை.. பெண்களை பெற்றவர்கள் தங்கள் மகள் காதலிக்கிறாள் என்றால் தாம்தூம் என குதிக்காமல் அதை புதிய கோணத்தில் அணுகலாமே என பாசிட்டிவான கருத்தை சொன்னதற்காக இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.