“டிக்கெட் விலையை ஏத்திட்டே போனா திருட்டு விசிடி எப்படி ஒழியும்?” –டி.ராஜேந்தர் தாக்கு..!

துபாய்யை சேர்ந்த வெண் கோவிந்த் என்பவர் தயாரித்திருக்கும் படம் தான் ‘தகடு தகடு’. பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தை ராகேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இயக்குனர் சற்குணத்தின் ஊர்க்காரரும் கூட.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், சத்யராஜ், டி.ராஜேந்தர், ஜெயம் ரவி, இயக்குனர் சற்குணம் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்தப்படம் திருட்டு விசிடி சம்பந்தப்பட்ட கதையை கொண்டது. அதனால் இந்த விழாவில் பேசிய டி.ராஜேந்தர் திருட்டு விசிடிக்காரகளை ஒரு பிடி பிடித்ததோடு அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களையும் ஒரு பிடிபிடித்தார். “இன்னைக்கு நேத்தா திருட்டு விசிடி வியாபாரம் நடக்குது. இது ஆரம்பிச்சப்பவே நான் விசிடி கடைகளை அடிச்சு ஒடைச்சேன்.. ஆனா அதுக்கு எம்மேல கேசு போட்டாங்க.. ஆனா இப்ப யாரு அதுக்காக எதுத்து போராடுறாங்க?

சரி திருட்டு விசிடிய ஜனங்க ஆதரிக்கிறாங்க.. அது ஏன்..? பத்து வருஷமா ஏவி.எம்.ராஜேஸ்வரில 50ருபாய் தான் டிக்கெட்டே.. அங்க எப்பவுமே ஹவுஸ்புல்லாகுது எப்படி? மத்த இடத்துல எல்லாம் 120ரூபாய் டிக்கெட் வாங்குனா அப்புறம் சாதாரண ஜனங்க திருட்டு விசிடி வாங்காம என்ன பண்ணுவான்..? தியேட்டர்கள மொதல்ல கட்டணம் வாரியா பிரிங்க.. ட்ரெய்ன்ல ஒரே டிக்கெட் எடுத்துட்டு எதுல வேணாலும் போகமுடியுமா..? அது அதுக்குன்னு தனித்தனியா கட்டணம் இருக்குல்ல..அப்படி பிரிங்க.. அப்பத்தான் ஜனங்க தியேட்டருக்கு வருவாங்க..” என திருட்டு விசிடி உருவாவதற்கு ஆதாரமாக இருக்க கூடிய தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர்காரர்களின் பேராசைக்கு சூடு வைத்தார்.