“மாணவர்கள் வேலையில் சேர, ஒர்க் ஷாப் ஆரம்பிக்க போகிறோம்” –மாணவர்களுக்கு சூர்யா வாக்குறுதி

கடந்த 34 ஆண்டுகளாக ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசளித்து ஊக்கப்படுத்தி வருகிறது ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை. தொடக்கத்தில் 2850 ரூபாய் அளிக்கப்பட்ட பரிசுத் தொகை, இன்று இரண்டரை லட்ச ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக சிவகுமார் பொறுப்பில் வழங்கப்பட்ட இந்த ஊக்கப்படுத்தும் முயற்சியில் 2006ல் இருந்து சூர்யாவின் அகரம் பவுண்டேஷனும் இணைந்து கொண்டது. சென்னையில் நடந்த 35வது ஆண்டு விழாவில் தமிழகத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை இனம் கண்டு 25 மாணவர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாயை சிவகுமார்,சூர்யா இணைந்து வழங்கினார்கள்.

மேலும் சிவகுமார், அறக்கட்டளை–அகரம் அமைப்புகள் மூலம் ‘வாழை’ அமைப்புக்கு 2லட்ச ரூயாயும் பேராசிரியர் கல்விமணி என்கிற கல்யாணி திண்டிவனத்தில் நடத்தும் தாய் தமிழ்ப் பள்ளிக்கு ஒரு லட்சரூபாயும் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய சிவகுமார் தமிழுடன் ஆங்கிலம் கற்க வேண்டியதின் அவசியத்தையும் விளக்கினர். மேலும் “தமிழ்நாட்டில் தமிழ் படிக்க தேவையில்லை, விருப்பப்பட்டால் படிக்கலாம் என்கிற சட்டத்தையே மாற்றுங்கள்” என தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்தார். மேலும் படித்து மேதையான அப்துல்கலாம், சீனிவாச சாஸ்திரி பற்றியும் படிக்காது மேதையான காமராஜர், எம்.ஜி.ஆர், இளையராஜா போன்றவர்கள் பற்றியும் விளக்கினார் சிவகுமார்.

நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது “இந்த நிகழ்ச்சிகளை நாங்கள் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறோம். அப்பா செய்கிற உதவிகளைப் பார்த்து நாமும் செய்ய வேண்டும். அதுவும் கல்விக்கு செய்யும் உதவியே சிறந்தது என்று உணர்ந்தோம். அப்பாவை விட சில மடங்காவது அதிகம் செய்தால்தான் வளர்ச்சி. அகரம் பவுண்டேஷன் அப்பாவின் பொறுப்பை பகிர்ந்து கொண்டது. இதுவரை 1000 மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கியிருக்கிறது. ‘அகரம்’ அறக்கட்டளை,’விதை’ திட்டத்தின் கீழ் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள் சமூகத்தை எதிர்கொள்ளும் பயிற்சியையும் அளித்து வருகிறது. இந்த பயிற்சிவகுப்பை அனைத்து மாணவர்களும் பெறுவதற்கு வசதியாக மதுராந்தகத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பயிற்சி ஒர்க் ஷாப் அமைய இருக்கிறது. இதற்கான இடத்தை அகரம் பவுண்டேசனுக்காக சாய்ராம் கல்லூரி நிர்வாகம் வழங்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிகளை ‘அகரம்’ ஜெயஸ்ரீ தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நன்றி கூறினார்.