தடை நீங்கியது: தமிழகம் முழுவதும் நாளை வெளியாகும் விஸ்வாசம்..!

விஸ்வாசம் திரைப்படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலை ஒட்டி நாளை ரிலீசாக இருக்கிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்காக எகிறியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை குறித்து பேசிய இயக்குனர் சிவா , உண்மையும், பாசமும், நேசமும், சொந்தம் , உறவு, எகத்தாளமும் கொண்ட மக்கள் வாழும் அற்புதமான கிராமத்து பின்னணியில் விஸ்வாசம் கதை நகரும் என தெரிவித்துள்ளார்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்று இருந்த கடன் பாக்கி 78 லட்சம் ரூபாயை திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்குத் தொடர்ந்தார். இதனால் அந்த பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பாக்கி தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதம் உள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து, தடையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி 3 மாவட்டங்களில் படத்தை ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் விஸ்வாசம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது.

Leave a Response