தனது விடுதலைக்காக பாடுபட்ட வைகோவை இன்று நேரில் சந்தித்த நக்கீரன் கோபால்..!

நக்கீரன் ஆசிரியர் கோபால் நேற்று போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டார். அவரது கைது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது. தேசிய அளவில் நக்கீரன் கோபால் கைது விவகாரம் அனலைக் கிளப்பி விட்டது. அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சியினர் திரண்டெழுந்தனர்.

சென்னையில் கோபால் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு வைகோ போராட்டத்தில் குதித்தார். அவரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர். அதேபோல திமுக தலைவர் மு.கஸ்டாலினும் மருத்துவமனைக்குச் சென்று கோபாலை சந்தித்தார். அரசுக்கும், காவல்துறைக்கும் அவர் எச்சரிக்கையும் விடுத்தார்.

வைகோ நேற்று செய்தியாளர்களிடையே பேசுகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கடுமையாக சாடிப் பேசினார். இந்த நிலையில் தனது விடுதலைக்காக பாடுபட்ட வைகோவை இன்று நேரில் சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி தெவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் இப்படி ஒரு ஆளுநர் இருந்ததில்லை. தமிழக சரித்திரத்தில் இப்படி ஒருவரை பார்த்ததில்லை. இப்படி ஒரு ஆளுநரை நாம் பார்த்ததே இல்லை. இவர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். நீக்கப்பட வேண்டும். மத்திய அரசு இதைச் செய்ய வேண்டும்.

காவல்துறையினரையும், நீதித்துறையினரையும் அவமதித்தவர்களுக்கு ராஜ்பவனில் விருந்து நடக்கிறது. கோபால் கைது செய்யப்படுகிறார். நக்கீரன் கோபால் கைதை மறைக்க நேற்று பெரும் சதி நடந்தது. ஆனால் அனைவரும் சேர்ந்த அதை முறியடித்து விட்டோம். எங்களது கட்சி தோழர்கள் தமிழகம் முழுவதும் போராடினார்கள்.

நக்கீரன் கோபால் விடுதலையாகி விட்டார். ஆனால் அவர் மீது போட்ட வழக்கு அப்படியேதான் உள்ளது. அதை போலீஸார் வாபஸ் பெற வேண்டும். அதுதான் கோர்ட்டில் நேற்று பொட்டில் அடித்தது போல சொல்லி விட்டார்களே, இது தவறு என்று. பிறகு ஏன் வழக்கை வாபஸ் பெறாமல் உள்ளீர்கள். உடனே வாபஸ் பெறுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உங்களைத் தேடி வரும்.

தமிழக அரசு இருக்கும் ஒவ்வொரு நொடியும் இந்த மாநிலத்துக்கு ஆபத்து. நேற்று நியூட்ரினோ வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வந்தபோது தமிழக அரசின் வக்கீல் வாயே திறக்காமல் இருந்தார். இவர்கள் தமிழகத்தை சுடுகாடாக்க முடிவு செய்து விட்டனர். இந்த அரசு போகாத வரை இந்த மாநிலத்துக்கு ஆபத்துதான்.

நேற்று நடந்த சம்பவத்தில் ஒரு நன்மை விளைந்தது. பத்திரிகைகள் பக்கம் நெருங்காதே என்பதைக் காட்டி விட்டோம். நீதித்துறையும் வென்று விட்டது என்றார் வைகோ.

Leave a Response