ஆயுள் முழுக்க சிறையில் இருக்க தயார்: மு.க.ஸ்டாலின்..!

நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய திமுகவினரை காவல்துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் இருந்து, ஆளுநரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படுமானால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும், ஆளுநர் ஆய்வு தொடரும் என்றும், அதற்கு சட்டப்படி உரிமை உள்ளது என்றும் மிரட்டல் அறிவிப்பு வெளியானது.

ஆளுநர் மாளிகையின் அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்ற சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஆளுநரின் அறிவிப்பு மற்றும் ஆய்வு குறித்து பேச முயன்றார்.

ஆனால், சட்டமன்ற சபாநாயகர் தனபால், ஸ்டாலினுக்கு ஆளுநர் குறித்து பேச அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி யினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுத்ததால், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தாக தெரிவித்தார். ஏற்கனவே, 1995ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆளுநர் குறித்து விவாதம் நடத்தி, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என்பதையும் முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டி பற்றி மறைந்த ஜெயலலிதா பேரவையில் பேசியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

தற்போதைய ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதால் அது பற்றி பேச பேரவையில் முயற்சித்த போது, அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார். சேலம் சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை; ஆனால் குறைத் தீர்ப்பு கூட்டம் நடத்தி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்” என்று வலியுறுத்து வதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆளுநரின் சிறை தண்டனை எச்சரிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “7 ஆண்டுகள் அல்ல.ஆயுள் முழுக்க சிறையில் இருக்க தயார்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்,

Leave a Response