காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றுக்கு சென்று அக்கல்லூரி மாணவிகளிடம் உரையாடினார். தன்னை ராகுல் என்றே அழைக்கலாம் என்றும், தன்னிடம் எந்தவித கடினமான கேள்விகளையும் கேட்கலாம் என்றும் கூறிய ராகுல், மாணவிகளின் சரமாரியான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதுமட்டுமின்றி இதுபோன்று 3000 பேர் மத்தியில் நின்று எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று பிரதமர் மோடியால் கூற முடியுமா? என்றும் அவர் சவால் விடுத்தார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவிகள் மத்தியில் ராகுல்காந்தி பேசிய இந்த உரையாடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை ராகுல் பரப்புவதாக குற்றஞ்சாட்டிய தமிழிசை, பிரதமர் மோடி குறித்து கல்லூரி மாணவிகளிடம் ராகுல்காந்தி தவறாக சித்தரிப்பதாகவும், கல்லூரியை எதிர்களமாக மாற்ற வேண்டாம் என்றும் அவர் ராகுலுக்கு அட்வைஸ் கூறினார்.
மேலும் மோடியை சிறைச்சாலைக்கு அனுப்புவோம் என ஏளனம் பேசும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஆணவத்தை கண்டிப்பதாகவும், ஊழல் காங்கிரஸ் தேர்தலுக்குப்பின் காணாமல் போகும் என்றும், போபர்ஸ் ஊழல் வாரிசுகளே உங்களை வரலாறு மறக்காது என்றும் ராகுல்காந்தியை தமிழிசை விமர்சனம் செய்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் நாடாளுமன்றத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும், ராகுலின் தமிழக வருகையால் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.