பிடிபி கூட்டணியை முறித்தது பாஜக.. ஜம்மு காஷ்மீர் அரசு கவிழ்கிறது?

ஜம்மு காஷ்மீரில் பாஜக – மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) நடுவேயான கூட்டணி முறிந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடருவதில் பாஜக, மஜக இடையே கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிடிபி கட்சியின் மெஹபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

மொத்தம் 87 உறுப்பினர் கொண்ட சட்டசபையில், பாஜக பலம் 25 ஆகவும், பிடிபி பலம் 28 ஆகவும் உள்ளது. குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு தேவை 44 எம்எல்ஏக்களாகும்.

இந்த நிலையில், மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக பொறுப்பாளர் ராம்மாதவ் இன்று மதியம் நிருபர்கள் மத்தியில் அறிவித்தார். பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக பேச முடியாத சூழல் காஷ்மீரில் உருவாகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதற்கான கடிதத்தை மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் ராணுவவீரர் அவுரங்கசீப் கடத்தி கொல்லப்பட்டது, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது, பத்திரிகையாளர் சுஜாத் புகாரி சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுக்கும், பிடிபி கட்சிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான் கூட்டணி முறிவுக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஆலோசனை நடத்திய சில மணி நேரங்களில் பாஜக தலைவர் அமித்ஷா இக்கூட்டணியை முறிக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Response