தமிழகத்தில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்..

தமிழகத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என,மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ”பாஜக கோவை மாவட்ட தலைவர் சி.ஆர். நந்தகுமார் இல்லத்தின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது கோழைத்தனமானது, கடுமையான கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் பயங்கரவாதிகளுடைய பயிற்சி முகாம்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும், அதைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்தி வருகின்றேன்.

துரதிருஷ்டவசமாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அரசாங்கமும் கூட அதை ஒரு பொருட்டாக எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசாங்கம் இதை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அது நிச்சயமாக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மிகப் பெரிய தீங்கு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு பேரழிவைத் தருவதாக அமைந்துவிடக்கூடும். ஆகவே, உடனடியாக தமிழகத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் மீது துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகள் மீது எடுக்க கூடிய நடவடிக்கைகள் என்ன என்று அவ்வப்போது தமிழக அரசாங்கத்தினால் கவனிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்களோ அதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும், காவலர்களும் பாதுகாப்பாக இருக்கும்படியான வகையிலும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response