மீண்டும் ‘பிக் பாஸ்’ வருகிறார் கமல்ஹாசன்..!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கடந்த வருடம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். மொத்தம் 100 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

நமிதா, காயத்ரி ரகுராம், சக்தி பி.வாசு, ஆரவ், ஓவியா, பிந்து மாதவி, கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, காஜல் பசுபதி, ஜூலி, சினேகன், ரைஸா வில்சன், ஹரிஷ் கல்யாண், ஆர்த்தி, சுஜா வருணி, அனுயா, பரணி என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டனர். இதில், ஆரவ் வெற்றி பெற்றார்.

ட்விட்டரில் மட்டுமே தன்னுடைய கருத்துகளையும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மீதான விமர்சனத்தையும் வைத்துவந்த கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியில் தான் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார். குறிப்பாக, அரசியல் குறித்து அவர் பேசிய முதல் மேடை இதுதான். அதன்பிறகுதான் தீவிர அரசியலில் இறங்கி, தற்போது கட்சியையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ சீஸன் 2 வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. அதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கப் போகிறார் என்கிறார்கள். கட்சிப் பணிகளுக்கு இடையில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க இருக்கும் கமல், நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.

Leave a Response