சென்னையில் தொடரும் சொகுசுகார் விபத்து- பலியாவது ஏழை மக்கள்!

car

பெரிய மனிதர்கள் வீட்டு பிள்ளைகள் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதும் பின்னர் போதையில் காரோட்டி வருவதும் அதனால் விபத்துகள் நேர்வதும், அப்பாவிகள் உயிர் போவதும்  போலீசார் அதை சாதாரண வழக்காக பதிவு செய்வதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையோரமாக நின்றிருந்த ஆட்டோக்கள் மீது சொகுசுகார் இடித்து தள்ளியதில் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த 4 ஆட்டோ ஓட்டுநர்கள், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

car1

வீக் எண்ட் பார்ட்டியை முடித்து விட்டு தனது நான்கு நண்பர்களுடன் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்த இளைஞர் குடிபோதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. அதிவேகத்தில் காரை ஓட்டி வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காரை வேகமாக இயக்கிய இளைஞர் மற்றும் உடன் வந்தவர்களை கைது செய்தனர்.

இந்த விபத்தில் 6 ஆட்டோக்கள் நசுங்கின. விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்-க்கு மனைவி காயத்ரி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், விபத்துக்கு காரணமானவர்களை போலீசார் வந்து தனியாக அழைத்துச் சென்றனர். என்றும், விபத்து நடந்த பின்பு இவர்கள் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்ததாகவும் வேதனையுடன் கூறினார். நள்ளிரவில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்துவது சென்னையில் அடிக்கடி நடந்து வரும் சம்பவமாக மாறிவிட்டது.

Leave a Response