“கல்யாண சமையல் சாதம்” விமர்சனம்:

காதல் மற்றும் காமத்தை ஆபாசமின்றி நகைச்சுவையாக தயாரித்து வெளிவந்துள்ள படம் “கல்யாண சமையல் சாதம்”. இந்த படத்தில் பிரசன்னா கதாநாயகனாகவும், லேகா வாஷிங்டன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், கிரேசி மோகன், காத்தாடி ராமமூர்த்தி, உமா ஐயர், கீதா ரவிசங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அரோரா இசை அமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை சத்யராஜ் செய்துள்ளார். ஆனந்த் கோவிந்தன் மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்க அறிமுக இயக்குனர் R.S.பிரசன்னா எழுதி இயக்கியுள்ளார் இந்த “கல்யாண சமையல் சாதம்”.

மீரா’வாக நடிக்கும் லேக்கா வாஷிங்டன்’னை பெண் பார்க்க செல்கிறார்கள் ரகு’வாக நடிக்கும் பிரசன்னா மற்றும் அவன் குடும்பத்தினர். இருவரும் ஒருவரை ஒருவர் தனிமையில் சந்தித்து புரிந்துகொள்கிறார்கள். எவரும் எதிர்பார்க்காத விதத்தில் ரகு மீராவை திருமணம் செய்துக்கொள்ள ஒத்துக்கொள்கிறார். இப்போது தான் ஆட்டம் ஆரம்பிக்கிறது. மீரா தன் முடிவை சொல்ல இரு நாட்கள் அவகாசம் கேட்கிறாள்.

ரகுவை ஒப்புக்கொண்ட மீரா, ரகுவுடன் ஒரு நாள் உல்லாசம் செல்கிறாள். அங்கு உல்லாசத்தில் துணிந்து செயல்பட்ட மீராவுக்கு ரகுவினால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ரகு அதற்க்கு சரிப்படுவான, மாட்டானா என்பது இருவருக்குமே ஒரு கேள்வி குறி.

சாதாரணமாக ஒருவர் புது வண்டியை வாங்கி அதில் ஸ்டார்டிங் ட்ரபிள் வந்தால் தங்கள் சக நண்பர்களிடம் ஆலோசனை பெறுவார்கள், அருகில் உள்ள மெக்கானிக்கை அணுகுவார்கள். அதை போல் இங்கு ரகு தன் பிரச்சன்னைகாக சக நண்பர்களுடன் ஆலோசனை பெற்று சிட்டுகுருவி மருத்துவர், ராசி கல் ஜோசியர் மற்றும் மருத்துவராக நடிக்கும் கிரேசி மோகனை சந்திக்கிறார். அவர்கள் சொல்லும் ஆலோசனையும், அங்கு நடக்கும் நகைச்சுவையும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது.

ஒரு கட்டத்தில் ரகுவின் அந்த பிரச்சனையை, மீரா ரகுவிடம் குத்தி காட்ட அங்கு சற்று பூகம்பம் வெடிப்பதும் ரகு மீராவை எவ்வாறு சமாதானம் செய்கிறார் என்பதும் மிக சுவாரசியம். ரகுவின் பிரச்சனைக்கு அவன் மாமனாராக நடிக்கும் டெல்லி கணேஷ் ரகுவிற்கு சொல்லும் ஆலோசனை அனைவரையும் சிரிப்பு அலையில் வீழ்த்துகிறது.

ரகுவின் ஸ்டார்டிங் ட்ரபிள் முடிவுக்கு வருகிறதா, ரகு – மீரா இருவரும் சேர்ந்து வாழ்கிறார்களா என்பது படத்தின் கிளைமாக்ஸ்.

மொத்தத்தில் இளைஞர்கள் மற்றும் திருமணம் ஆகியவர்கள் அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய ஒரு நகைச்சுவை நிறைந்த திரைப்பட விருந்து “கல்யாண சமையல் சாதம்”.

கல்யாண சாப்பாடு திருப்தியா இருக்கும்.