விடியும் முன் – விமர்சனம்!!

8247Vidiyum-Munn-Posters-(4)

சமீப காலமாக காமெடி ஃபீவரில் இருக்கும் தமிழ் சினிமாவில்,அவ்வப்போது மூடர் கூடம்,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற வித்தியாசமான கதை, திரைக்கதையுடைய படங்களும் ரசிகர்களாலும்,விமர்சகர்களாலும்கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ரிலீசாகியிருக்கும் படம்தான் “விடியும் முன்”

நீண்ட இடைவெளிக்குபின் ‘நான் கடவுள்’ பூஜா, ஜான் விஜய், வினோத் கிஷன் மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் துவக்கத்தில், கொட்டும் மழையில் ஒரு வீட்டிலிருந்து ஒரு சிறுமியுடன் மூச்சு வாங்க ஓடி வரும் பூஜா ஒரு ரயிலில் ஏறுகிறார். ரயில் கிளம்ப, அடுத்து வரும் காட்சிகளில் அவர் ஒரு விலைமாது என்று தெரிய வருகிறது.அதே நேரத்தில் இவர்களை விலைமாது ஏஜன்ட், ரவுடி கும்பல் தலைவன் .அந்த வீட்டின் சின்னையா என்கிற தாதா ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல் தனித்தனியாக தேடுகிறது. இவர்கள் ஏன் துரத்துகிறார்கள், பூஜாவும், சிறுமியும்  அந்த வீட்டிலிருந்து தப்பித்து வரும் அளவிற்கு, அங்கு நடந்த மர்ம சம்பவம் என்ன? க்ளைமாக்சில் இருவரும் அவர்களிடம் மாட்டினார்களா, தப்பித்தர்களா? என்பதே இப்படத்தின் கதை,

படம் முழுக்க விரசமான காட்சிகள்,வசனங்களுக்கு எவ்வளவோ வாய்ப்பிருந்தும், நேர்த்தியான, யதார்த்தமான சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை நம்பி படம் எடுத்திருக்கும் இயக்குனரைக் கைகுலுக்கிப் பாராட்டலாம். நிறைய இடங்களில்  விசுவல்ஸ் மூலமே காட்சிகளை தெளிவுபடுத்தயிருக்கும் விதம் அருமை .இயக்குநரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப ஒளிப்பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளரின் கேமரா, ரயில் பயண காட்சிகள், திருச்சி தெருக்கள், விபச்சாரம் செய்யும் இரவு விடுதி என கிடைக்கும் இடங்களிலெல்லாம் அதன் உண்மைத்தனங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

படத்தில் கதையின் நாயகியாக வரும் சிறுமியின் நடிப்பு அபாரம். இந்த வருட சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது பட்டியலில் நிச்சயம் முதலிடம் உண்டு. நீண்ட இடைவெளிக்குப்பின் பூஜா, விலைமாதுவாக நடித்து, ரேகா எனும் அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் மற்றும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களான ஜான் விஜய், வினோத், லட்சுமி ராமகிருஷ்ணன், மற்ற புதுமுகங்கள் தங்கள் கதாபாத்திரங்களின் சாரம்சத்தைப் புரிந்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

இசை, எடிட்டிங் போன்றவைகளும் திரைக்கதையின் நேர்த்திக்கும், நம்பகத்தன்மைக்கும் துணை புரிகின்றன. மொத்தத்தில் விடியும் முன் “தமிழ் சினிமாவின் மற்றுமோர் மைல்கல்”’ .