நவீன சரஸ்வதி சபதம் – விமர்சனம்!!

tamil-cinema-naveena-saraswathi-sabatham-movie-wallpaper01

தமிழ் சினிமாவில் வந்திருக்கும் ஒரு ஃபேண்டசி, காமெடி படம் தான் இந்த நவீன சரஸ்வதி சபதம். சமீபகாலமாக குடியை நிறுத்த மேசேஜ் சொல்லும் படங்கள் ஏராளம். அதில் இதுவும் ஒன்று. ஜெய், சத்யன், கணேஷ், ராஜ்குமார் நால்வரும் நண்பர்கள். இவர்கள் குடித்துவிட்டு ஊரில் செய்யும் அட்டகாசத்தை பார்த்துவிட்டு இவர்களை தேர்ந்தெடுத்து தனது திருவிளையாடலை ஆரம்பிக்கிறார் சிவபெருமான்.

இவர்கள் தங்கள் வாழ்வின் லட்சியத்தை அடையப்போகும் சமயத்தில் அவர்களை ஒரு தீவுக்கு கொண்டுபோய் மாட்டிவிடுகிறார். பார்வதியின் கருணையால் இவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கிறார். அதை அவர்கள் பயன்படுத்தி கொண்டால் அவர்களை விட்டு விடுகிறேன் என்று கூறுகிறார். அங்கிருந்து அவர்கள் தப்பித்தார்களா? திருந்தினார்களா? இலட்சியத்தை அடைந்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.

படத்தின் தலைப்புக்கு ஏற்ப சிவபெருமானின் சொர்க்கலோகமும் மிகவும் நவீனமாகவே உள்ளது. ஆப்பிள் ஐ-போன், MAC கம்ப்யூட்டர், பென் டிரைவ் என டெக்னிகல் அம்சங்கள் ஏராளம்.

ஜெய் வழக்கம் போலவே தனது நடிப்பாலும், வசனங்களாலும் சிரிக்க வைக்கிறார். சத்யன் விடிவி கணேஷ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ராஜ்குமார் ஆகியோர் ஜெய்க்கு பக்கபலமாக இருந்து படத்தை நகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

சிவபெருமானாக சுப்பு பஞ்சு, நாரதராக மனோபாலா, பார்வதியாக தேவதர்ஷினி, ஜெய்யின் அப்பாவாக சித்ரா லக்ஷ்மன் என அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இடைவேளைக்கு முன்புவரை ஜெய், நிவேதா காதல் காட்சிகள், நான்கு பேரின் கலாட்டா, சொர்க்கலோகக் காட்சிகள் என ஜாலியாக செல்கிறது படம். இடைவேளைக்கு பின் தீவிலேயே படத்தை முடக்கி, ரசிகர்களின் ஆர்வத்தை குறைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆனந்த ஜீவா படத்தை அழகாகவும், கலராகவும் காட்டி ரசிக்க வைக்கிறார். பிரேம்குமாரின் இசையில் காத்திருந்தாய் அன்பே, வாழ்க்கை ஒரு குவாட்டர் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. வைரமுத்து மற்றும் கானாபாலா பாடல் வரிகள் அதற்கு அழகு சேர்க்கின்றன.

வெங்கட் பிரபு மற்றும் CS.அமுதனிடம் பணியாற்றிய சந்துரு தங்கள் குருக்களின் பாணியை பின்பற்றி படம் எடுத்துள்ளார். திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக செய்திருந்தால் படம் நின்று ஜெயித்திருக்கும்.