ஐந்து ஐந்து ஐந்து – விமர்சனம்!

12 x 15 TAMIL (28-7-13) CMYK

சொல்லாமலே, ரோஜாகூட்டம், டிஷ்யூம், பூ போன்ற மென்மையான படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனர் சசி கொஞ்சம் வேறு ஒரு தளத்தில் பயணித்திருக்கும் படம் தான் இந்த ஐந்து ஐந்து ஐந்து. இதுவும் ஒரு வகையில் அழுத்தமான காதல் படம் தான், சஸ்பென்ஸ், ஆக்ஷன் கலந்த காதல். இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம் கஜினி படம் போல காதலுக்காக தனி ஒரு ஆளாய், யார் உதவியும் இல்லாமல் அனைத்தையும் நாயகனே செய்து முடிப்பது.

ஒரு அதிர்ச்சிகரமான கார் விபத்துடன் துவங்குகிறது படம். விபத்தில் அடிபட்டு பரத் துடித்து கொண்டிருக்க, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார். ஒரு மனநல மருத்துவரிடமும் சிகிச்சைக்காக கூட்டி செல்கிறார் அவரின் அண்ணன் சந்தானம். இதற்கிடையில் தன் காதலி என கூறி ஒரு பெண்ணின் படத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஒரு கல்லறைக்கு சென்று தினமும் அஞ்சலி செலுத்துகிறார். ஆனால் அந்த மாதிரி ஒரு பெண் இல்லை என அவரை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் கூறுகிறார்கள். உண்மையில் அப்படி ஒரு பெண் இருந்தாளா? பரத் காதல் உணமையானதா? கற்பனையானதா? என்பதை பல சஸ்பென்ஸ் முடிச்சுகள் மூலம் ரசிகர்களை இருக்கையில் கட்டிபோடுகிறார் இயக்குனர் சசி.

அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் பரத்தின் அபார உழைப்பு படம் முழுக்க வெளிப்படுகிறது. இளம் பெண்களுக்கு பார்த்தவுடன் பிடிக்கக்கூடிய சாக்லேட் பாய் போன்ற தோற்றமாகட்டும், 6 Pack வைத்துகொண்டு முறுக்கிய நரம்புகளுடன் அதிரடியாக சுற்றும் அரவிந்த் ஆகட்டும் சூப்பர் என்று சொல்ல வைக்கிறார் பரத்.

நாயகி மிருத்திகா ஒரே வார்த்தையில் சொல்லபோனால் அழகி. பார்ப்பதற்கு ஒரு பெயிண்டிங் போலவே இருக்கிறார். அழகு, நடிப்பு இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். பாடல்களிலும் மிளிர்கிறார்.

சந்தானத்திற்கு இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டர். கொஞ்ச நேரமே வந்தாலும் பரத்தின் அண்ணனாக வந்து அசத்துகிறார். எரிக்கா பெர்னாண்டஸ் இன்னொரு நாயகி. நடிக்க அவகாசம்  குறைவு.

சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவும், சைமனின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சைமனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனாலும் சில பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடையாக இருப்பது உண்மை.

படத்தின் ஆரம்ப கார் விபத்து காட்சியே அசத்தல். அதன் பின் வரும் ஒவ்வொரு காட்சியும், சஸ்பென்சை உடைக்காமல் இறுதிவரை கொண்டு செல்ல இயக்குனர் சசிக்கு கைகொடுக்கின்றன. இயக்குனர் சசிக்கு மென்மையான காதல் படங்கள் தான் பரிச்சயம். அவரால் ஆக்ஷன் படங்கள் செய்ய முடியாது என நினைத்தவர்களுக்கு, தன்னால் எல்லாவிதமான படமும் செய்ய முடியும் என நிரூபித்துள்ளார் இயக்குனர் சசி.