நடிகையும், அரசியல்வாதியுமான கௌதமி தடிமல்லா, சென்னை பெரியநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து, தன்னை மிரட்டும் குழுவினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
தன் புகாரில், சி. அழகப்பன் என்பவர் தலைமையிலான குழுவினர், தன்னுடைய நீலாங்கரை பகுதியில் உள்ள சொத்தை சட்டவிரோதமாக அபகரித்ததுடன், தன்னிடம் இருந்து ரூ.9.90 கோடி பணத்தை மோசடி செய்து கைப்பற்றியுள்ளனர் எனக் கூறியுள்ளார். இந்த மோசடியில் அழகப்பனின் மனைவி நாச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, மைத்துனர் பாஸ்கர் மற்றும் டிரைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோரும் பங்கு உள்ளதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு (CCB-1) எஃப்.ஐ.ஆர். எண் 232-2023 ஆக பதிவு செய்திருந்தது. குற்றவியல் முறையீடுகளுக்காக, சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குற்றப்புலனாய்வு வழக்கில் சந்தேகநபர்களாக இருந்தவர்கள் முன் வைத்த முன்கூட்டிய ஜாமீன் மனுக்களை, சென்னை உயர்நீதிமன்றம் 2023ம் ஆண்டு டிசம்பரில் நிராகரித்தது. அப்போது நீதிமன்றம், “ஓர் பெண்ணின் சொத்தை அவர்களுக்கு தெரியாமல் கைப்பற்றுவதும், அவர்களுடைய வாழ்க்கையை அழித்துவிடும் வகையில் நிதிமோசடி செய்வதும் திட்டமிட்ட குற்றமாகும்” எனக் கடும் விமர்சனம் செய்தது.
மேலும், குற்றவாளிகள் பொய்யான முகவரி மூலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி, மின் இணைப்பு போன்றவற்றைப் பெற்றுள்ளதாகவும், திட்ட அனுமதியை மீறி கட்டுமான பணிகளைத் துவக்கியதாகவும் கௌதமி புகாரில் தெரிவித்துள்ளார். மாநகராட்சி இந்த கட்டுமானங்களை பதிவுசெய்து பூட்டி, பிறகு ரூ.96,400 அபராதம் வசூலித்து இடித்து அகற்றியது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, தன்னுடைய வாட்ஸ்அப்பில் வழக்கறிஞர்கள் என கூறிகொண்டு, “சட்டரீதியாக நடிகை கௌதமி, நாச்சாள் வீட்டை இடித்தாரா? சட்டத்தை மீறி நடிகை கௌதமி, நாச்சாள் வீட்டை இடித்தாரா?” என ஒரு தலைப்பை முன்வைத்து மே 15, 2025 அன்று காலை 11:30 மணியளவில் நீலாங்கரை காவல் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளதாக தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் கௌதமி. இந்த போராட்டத்தை அழகப்பணின் தூண்டுதலில் நடைபெற போவதாகவும், இவர்களால் தனது உயிருக்கும், தனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கு அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
“இந்த குழுவினர் மற்றும் குற்றவாளிகள் எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே எனக்கு மற்றும் என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து காவலந்துறையினர், இதுவரை எந்தவொரு அறிக்கையோ அல்லது கௌதமிக்கு எந்த ஒரு பதிலும் தெரிவித்ததாக தெரியவில்லை. கௌதமி புகாருக்கு துணை நிற்குமா காவல் துறை என பொறுத்திருந்து பார்ப்போம்.






