அதிமுகவில் இணைவதற்கு எந்த ஒரு நிபந்தனையும் நான் விதிக்கவில்லை என்றும் சசிகலா தினகரன் இடமும் பேசியிருக்கிறேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
தேனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “நாங்கள் உருவாக்கப்பட்ட கட்சியில் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும். தினகரன் மனப்பூர்வமாக கட்சியினைய இணைய வேண்டும் என்று தான் சொல்கிறார். 2026ஆம் ஆண்டில் ஒன்று இணைந்தால்தான் அதிமுக கட்சிக்கு வாழ்வு இருக்கும். இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான். இது பன்னீர்செல்வமுக்கும் தாழ்வு தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென அமித்ஷா எவ்வளவோ சொன்னார். அதை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. 2026 தேர்தலில் அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் எல்லாருக்கும் வாழ்வு. அதிமுக ஒன்றிணைந்துவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பது தான் நல்லது என நான் கருதுகிறேன் ஜெயலலிதாவை தவிர அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது. செங்கோட்டையன் பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பது அவர் தான் பதில் சொல்ல வேண்டும். இன்று அதிமுகவில் மூத்த தலைவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகாலம் இரு தலைவர்களும் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய இயக்கம் அதிமுக. அதிமுகவின் சட்ட விதியின்படி, அதிமுக அடிப்படை உறுப்பினரால் தேர்தல் மூலம் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை யாராலும் மாற்ற முடியாது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழல் உள்ளது” என்றார்.
முன்னதாக பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளை ஆலோசனை கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைத்துள்ளார். இந்த கூட்டம் வரும் 17ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் போர்கொடி தூங்கியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து கட்சியை நடத்தி வந்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதிமுகவை முழுயாக எடப்பாடி பழனிசாமி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இருப்பினும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் ஒருதரப்பு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.