அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு தனி அணியும் இயங்கி வருகிறது.
டிடிவி. தினகரன் அமமுக எனும் தனிக்கட்சியையே நடத்தி வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையனின் அதிருப்தி அதிமுகவில் மேலும் விரிசலை தூண்டுமோ என தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இது அதிமுகவில் விவாதத்தை ஏற்படுத்தியது. விழாவை புறக்கணித்தது ஏன் என விளக்கமளித்துள்ளார் செங்கோட்டையன்.
”என்னைப் பொறுத்தவரையில் அத்திக்கடவு- அவிநாசி திட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னால் என்னை சந்தித்தார்கள், சந்திக்கிறபோது நான் அவர்களிடத்தில் வைத்த வேண்டுகோள் என்னவென்று சொன்னால், என்னை வளர்த்த புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருவுருவப் படங்களை இல்லை. என்னிடத்திலே கலந்து இருந்தால் அதை நான் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன். ஆகவே என்னை வளர்த்த ஆளாக்கிய உருவாக்கிய அவர்களின் திருவுருவப்படங்கள் இல்லை.
அதே நேரத்தில் அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி அளித்தார்; திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. அப்போது நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆக இருந்த ராமலிங்கம் ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டார். ஆகவே இந்த பணிகளை துவங்கிய நேரத்தில் அம்மா அடித்தளமாக இருந்திருக்கிறார்.திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. ஆகவே நான் விழாவில் பங்கேற்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
அன்னூரில், அத்திக்கடவு – அவினாசி திட்ட குழு சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர், வேமாண்டாம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அதிக அளவில் பயன் பெற்று வரும் நிலையில் இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது, அப்பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் நிலவுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது.