விஜயால் வேங்கை வயல் பிரச்சனை முடிவுக்கு வருமா?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே அதிர்வடைய செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரணை செய்து 149 நபர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்ற நிலையில் 21 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனையும் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர் முரளி ராஜா உள்ளிட்ட மூன்று நபர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனையும் எடுக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் சிபிசிஐடி போலீசார் சிலர் திணறி வரும் நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த வழக்கு கடந்த பல மாதங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இருந்தது. இந்த வழக்கில் ஒவ்வொரு வாய்தாவின் போதும் சிபிசிஐடி போலீசார் மேலும் அவகாசம் வேண்டும் என்று தான் அவகாசத்தை கேட்டு வாங்கி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் வழக்கறிஞரே தலைமை நீதிபதியிடம் வேங்கை வயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கூடிய பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து வரும் 23ஆம் தேதி அதாவது நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாக சிபிசிஐடி விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் சிபிசிஐடி மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், 3 வருடமாக போராட்டம் நடத்தும் பரந்தூர் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தது அரசியலில் பேசு பொருளானது. அதே போல வேங்கைவயலுக்கு அவர் செல்ல உள்ளதாக தகவலும் வெளியாகியிருந்தது.

இதனால் வேங்கை வயல் வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . 23ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் ஒன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அல்லது இந்த வழக்கை சிபிஐ இடம் ஒப்படைப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிபதியிடம் கூற வேண்டும் இந்த மூன்றில் தான் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

இதனால் வேங்கை வயல் கிராம மக்கள் மட்டுமல்லாது தமிழகமே இந்த வழக்கில் சி பி சி டி போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்களா அல்லது இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது

இருப்பினும் தமிழகத்திற்குள் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஏற்கனவே தமிழக அரசு முடிவு எடுத்திருந்த நிலையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Response