ஈரோட்டில் தமிழக பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் சார்பில் நடத்தப்படும் தமிழ் பண்பாட்டு கண்காட்சியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார்.
மேலும், இந்த கண்காட்சியில் தமிழர்கள் வரலாறு குறித்து வைக்கப்பட்ட வரலாற்று தகவல்களையும் மண் சார்ந்த பொருட்களையும் சீமான் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிட நல் திருநாடு’ என்று வார்த்தை நீக்கியதாக சொல்லுபவர்கள். ஆரியம் வழக்கொழிந்து உட்பட வார்த்தைகளை தூக்கியது யாரு… திராவிட என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொதிக்கும் இவர்கள், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் இருப்பதற்கு கோபம் வரவில்லை.
நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும், அதற்கு என்ன செய்வார்கள். வரலாற்றில் ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய் என்று உள்ளது திராவிடத்தை வேண்டுமென நுழைத்து விட்டு 3 சதவீதம் உள்ள பிராமணர்கள் வைத்து 30 சதவீத திராவிடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். மாநில தன்னாட்சி பேசி வந்த நிலையில் கல்வி, மொழி, வரி, மருத்துவம் போன்ற அனைத்து உரிமைகளை பறிக்கொடுத்துவிட்டு மாநில உரிமைகளை பற்றி பேசுவது என்ன நியாயம்…?
நாம் தமிழர் தமிழ் தேசியம் என்றால் என்ன என்று விளக்குவதை போன்று, திராவிடம் என்றால் என்ன வென்று அவர்களால் சொல்ல முடியுமா… கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழகத்தின் நாகரிகம் என்றுதான் சொல்கிறது. ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள். ஆளுநர் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் நாங்கள் கொந்தளித்தால் தான் மாற்றினார்கள் என்று சொல்வதற்குதான் ஆளுநர் விவகாரத்தை பேசி வருகிறார்கள்.
மேலும் தீபாவளிக்கு தற்காலிகமாக 1500 மதுகடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கவனத்தில் கொள்ளாத வகையில் தொலைக்காட்சி திசைதிருப்ப திராவிடம் விடப்பட்டது பெரிதாகப்பட்டுள்ளது. இந்தியை எதிர்க்க அருகதை தகுதி திமுகவுக்கு இல்லை. திமுகவினர் நடத்தும் பள்ளியில் இந்தி 2ஆவது மொழியாக உள்ளது, இந்தியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் நுழையவிட்டது திராவிட ஆட்சிகள்தான்.
இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சி உடன் அரசியல் லாபத்திற்காக கூட்டணி வைத்ததால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி தமிழகத்தில் வந்துவிட்டது. இப்போது வட மாநிலத்தவர்கள் ஒன்றைக் கோடி பேர் தமிழ்நாட்டில் உள்ளார்கள். தமிழ்த்தாய் பாடலில் உடன்பாடு இல்லை, நான் ஆட்சி அதிகாரத்தில் வந்ததால் திறமையான பாவலர்களை வைத்து நல்ல பாடல்களை எழுதுவேன் என்று கூறினார்.