மழை வெள்ளத்தில் போராடிய துப்புரவு பணியாளர்களுடன் உணவு அருந்திய முதல்வர்!

சென்னையில் கொட்டும் மழையிலும் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றிச் சொல்லும் விதமாக அவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் உணவு அருந்தினார்.

உணவருந்தியது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மக்கள் மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் நீர்வளத்துறை சார்பில் ரெட்டேரியை 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி, அதன் கொள்ளளவினையும் உயர்த்தி, 3.5 கி.மீ. சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் ரெட்டேரி தெற்கு பகுதியில் உள்ள மதகினை சீரமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில், கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் 91 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் – சென்னை, பெரம்பூர், செம்பியம், ராகவா தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. புத்துயிர் சிறப்புப் பள்ளியில் பயிலும் 70 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்காக 2 கணினிகள், 1 பிரிண்டர், 2 இரும்பு பீரோ, அத்தியாவசியப் பொருட்கள், என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், அச்சிறப்பு பள்ளியின் தாளாளர் டாக்டர் எட்வின் ராஜ்குமார் அவர்களிடம் பள்ளி மேம்பாட்டிற்காக நிதியுதவியும் முதல்வர் வழங்கினார்.

பின்னர், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, ரெயின் கோட், புடவை, போர்வை, ரஸ்க், பால் பவுடர், துவரம் பருப்பு, மிளகாய்த் தூள், சமையல் எண்ணெய், லுங்கி உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருள்களை முதல்வர் வழங்கினார். பின்னர் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவை அன்புடன் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உணவு அருந்தும் போது முதல்வருக்கு அருகே இருந்த தூய்மை பணியாளர், அவருக்கு அருகே அமர கூச்சப்பட்டு அதிக இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தார். உடனே முதல்வர், தனது இலையையும் நாற்காலியையும் நகர்த்திக் கொண்டு அந்த பெண் தூய்மை பணியாளர் அருகில் உட்கார்ந்தார். இதை கண்ட அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

Leave a Response