அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம், இன்று கோவையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்ட விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் திறன் வளர்ச்சி திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்றவர், “அவர் துணை முதல்வர்” எனக் கூறினார்.

பின்னர் சட்டென்று, “வரும் 19ஆம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்வர் எனக் கூற வேண்டும்” எனக் கூறினார். தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சிலர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



