‘நான் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்துதான் – ‘விலகுது திரை’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ்!

IMG_0741

அமெரிக்காவில் வசிக்கும் திருமதி. கார்த்திகா மகாதேவ் இசையமைத்த ‘விலகுது திரை’ என்ற திரை தமிழிசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி திரையரங்கில் நடந்தது. ஆல்பத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் எழுதியதுடன், அவற்றுக்கான பாடல் காட்சியையும் இயக்கியிருக்கிறார் முருகன் மந்திரம்.

முதல் குறுந்தகட்டை திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் வெளியிட, இசையமைப்பாளர் பரத்வாஜ், யூடிவி தனஞ்செயன், இயக்குனர்கள் பேரரசு, எஸ்.எஸ்.குமரன், ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், சுபஸ்ரீ தணிகாசலம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பெற்றுக் கொண்டார்கள்.

விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது, “இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று எனது தொலைபேசி நம்பரை எப்படியோ வாங்கி எனக்கு போன் அடித்தார் கார்த்திக் மகாதேவ். நான் அந்த தம்பதியை நேரில் வரச்சொல்லி பாடல்களை கேட்டதுடன் அவர்களை பற்றியும் விசாரித்தேன். கணவன் மனைவி இருவருமே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

கர்ப்பிணி மனைவியை வீட்டில் விட்டுவிட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ படிக்க போய்விடுவாராம் கார்த்திக் மகாதேவன். அந்த நேரத்தில் கணவன் அருகிலிருக்க வேண்டிய அவசியத்தை கூட அவரது படிப்புக்காக பொறுத்துக் கொண்டாராம் கார்த்திகா.

கார்த்திகாவுக்கு சினிமாவில் பாட வேண்டும் என்பது லட்சியம். இதற்காக சில முறை சென்னைக்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இதனால் பாட முடியாமல் திரும்பியும் போயிருக்கிறார். பின்பு வேலைக்கு போய் ஓரளவு பணம் சேர்ந்தவுடன் மனைவி செய்த அந்த தியாகத்திற்கு பரிசாக இந்த ஆல்பத்தை உருவாக்கிக் கொடுக்க முன் வந்திருக்கிறார் கார்த்திக் மகாதேவன். இந்த தம்பதியை நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

இந்த ஆல்பத்திற்கு பாடல்கள் எழுதிய முருகன் மந்திரம் இயக்குனர் கனவில் இருக்கும் ஒரு உதவி இயக்குனர் என்று அறியும் போது மகிழ்ச்சி… நல்ல தமிழறிவுடன் பாடல்களை எழுதியிருக்கிறார்… பாடல்கள் எழுதுவது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொழில்கள்தான். இயக்குனருக்கும் கொஞ்சம் இசைஞானம் இருக்க வேண்டியது அவசியம்… இந்த ஆல்பத்தைப் பார்க்கும் போது நான் இசையமைப்பாளனாக ஆனது ஞாபகத்திற்கு வருகின்றது….

நான் அரசியலுக்கு வந்த மாதிரி இசையமைப்பாளரானதும் ஒரு விபத்துதான். டார்லிங் டார்லிங் டார்லிங் படத்திற்காக சங்கர் கணேஷிடம் படத்தின் சூழ்நிலையை விளக்கி பாடல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நானே ஒரு ட்யூனை ஹம் பண்ணிக் காட்டினேன்… கணேஷ் உடனே ‘இதையே வைச்சுரலாம் நல்லாத்தான் இருக்கு’ என்று சொல்ல அதையே பொறுத்தமான வரிகளை போட்டு பாடலாக்கினோம். அந்த பாடல்தான் ஓ நெஞ்சே…

இளையராஜாவிடம் கோபித்துக் கொண்டுதான் நான் இசையமைப்பாளரானேன். கோபம் என்றால் நேரடியாக கோபம் இல்லை. ஒரு பாடலை பற்றி அவர்கள் எல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கும்போது நான் சங்கீத ஞானம் இல்லாத காரணத்தால்  அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாமல் தவிப்பேன். இதை தவிர்க்க வேண்டும் என்று உடனடியாக சங்கீதம் கற்க போனேன். ஒரு ஆர்மோனியத்தை வாங்கி முறைப்படி அதை இசைக்க கற்றுக் கொண்டேன். காலப்போக்கில் கீயை அழுத்தும்போதே எனக்கு ட்யூன் வர ஆரம்பித்துவிட்டது.

அதன் பிறகு நான் போடும் டியூன்லாம் நானே தான் போடுகிறேனா என்று பலருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது… இளையராஜா உட்பட… அவருக்கு எம்மேல பயங்கர கோபம்… நான் ஆர்மோனியப் பெட்டியை சரஸ்வதி மாதிரி வணங்குகிறவன். ஆனால் நீயெல்லாம் அதை எப்படி தொடலாம் என்று என்னிடம் சண்டைகே வந்துவிட்டார். சரஸ்வதியை நீங்க மட்டும்தான் கும்பிடணுமா என்று நானும் சண்டை போட்டேன். அதன் பிறகு வாலி மூலமாக நானே தான் மெட்டுப் போடுவதாகக் கேள்விப்பட்ட பிறகுதான் என் மீது அவருக்கு இருந்த கோபம் குறைந்தது… அதன் பிறகு மறுபடியும் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தோம்….

நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படமும் இயக்குகிறேன் என்று அமிதாப்பிற்குத் தெரியும்… ஆனால் இசையும் அமைக்கிறேன் என்று அவரால் நம்ப முடியவில்லை… ஒருமுறை கேள்விப்பட்டு நேராக ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கே வந்து விட்டார்… இப்போ என் கண் முன்னாடி ஒரு மெட்டுப் போடுங்க என்றார்… நமக்கு ராகங்களை புரிஞ்சுகிட்டு ஆர்மோனியப்பெட்டி எல்லாம் வாசிக்கத்தெரியாது.. ஹம் பண்ணுவேன் அதனை இசைக்கலைஞர்கள் இசையாக்குவார்கள்… அதற்கப்புறம் சில இசைக் கலைஞர்களை அவரசமாக அந்த இடத்திற்கு வரவழைத்து அவர்கள் வாசிக்க வாசிக்க, நான் அமிதாப் முன் என்னை நிரூபிப்பதற்காக ஹம் பண்ணிக் காட்டிய பாடல்தான் ‘பச்சை மலைச்சாமி ஒன்னு உச்சிமலை ஏறுதுன்னு…’

அப்படி இங்கே இருக்கிற எனக்கே இவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வரவேண்டியது இருக்கிறதென்றால் அமெரிக்காவில இருந்து இங்கு வந்த கார்த்திகாவிற்கு எவ்வளவு கஷடங்கள் இருந்திருக்கும.? ஒரு பெண் இசையமைப்பாளராக இருந்து கொண்டு தமிழில் இப்படி ஒரு ஆல்பம் வெளியிட்டிருப்பது உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கது.

அவருக்கு நல்ல புரிதல் உள்ள கணவராக கார்த்திக் மகாதேவ் கிடைத்திருக்கிறார்… தனது மனைவியின் திறமைகளை அறிந்து கொண்டு அதனை ஊக்கப்படுத்தி ஆல்பத்திற்கு இசையமைக்க வைத்தது மட்டுமில்லாமல் தானே அந்த ஆல்பத்தினை தயாரித்தும் இருக்கிறார்.. அதுமட்டுமில்லாமல் தனது மனைவி இசையமைக்கும் நேரங்களில் அவர்களது பிள்ளைகளை அவர்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்… இருவருக்கும் வாழ்த்துகள்… கார்த்திகா திரைப்படங்களுக்கும் இசையமைக்க வாழ்த்துகள்… என் அடுத்த திரைப்படத்தில் கார்த்திகாவை பாட வைக்கிறேன்.  இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.

‘விலகுது திரை’ ஆல்பத்தின் பாடல்களை ஹரிசரண், ராகுல் நம்பியார், பிரசன்னா ஆகிய முன்னணி பாடகர்களுடன் இணைந்து கார்த்திகா மகாதேவும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.