தி லோன் ரேஞ்சர் – விமர்சனம்!

lone-ranger-98336

தி லோன் ரேஞ்சர் என்பது 1933-ல் Frank Striker மற்றும் George Trendle ஆகியோரால்  வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம். அநீதியை எதிர்ப்பவனாக, தவறு செய்பவர்களை தண்டிப்பவனாக, அப்பாவிகளின் அறங்காவலனாக. வெற்றி உலா வரும் முகமூடி மனிதன் தான் இந்த லோன் ரேஞ்சர். வானொலி தவிர தொலைக்காட்சி தொடர்கள், வீடியோ கேம் மற்றும் நகைச்சுவை தொடர்களாக மக்களை சென்று சேர்ந்த லோன் ரேஞ்சர், தற்போது சினிமா வடிவில் உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்துள்ளார்.

இந்த ஆக்ஷன் படத்தை பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் வெற்றி கூட்டணியான தயாரிப்பாளர் Jerry Bruckheimer, இயக்குனர் Gore Verbinski மற்றும் நாயகன் Jhony Depp உருவாக்கியுள்ளனர். Armie Hammer என்ற புதுவரவும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் தான் படத்தில் “லோன் ரேஞ்சர்”

தன் பழங்குடி இனத்தை சூறையாடிய சில சந்தர்ப்பவாதிகளை பழிவாங்க கிளம்புகிறார் போர் வீரன் Jhony Depp. அப்போது ஒரு இளம் வக்கீலை (Armie Hammer)  ஆபத்திலிருந்து காப்பாற்ற நேரிடுகிறது. அவருடன் வந்த அணைத்து ரேஞ்சர்களும் இறந்து விட, இவர் மட்டும் உயிர்பிழைத்து விடுகிறார். நாளடைவில்  இருவரும் இணைந்து எங்கெல்லாம் தப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று தப்பு செய்தவர்களை தண்டிக்க தொடங்குகிறார்கள்.

எப்போதுமே நேர்மையாக இருக்க நினைக்கும் ஆர்மி ஹமர் சில நேரங்களில் ஜானி டெப் செய்யும் சில நல்ல காரியங்களை கூட வேண்டாம் என்று தடுக்கிறார். இப்படி இருக்கும் இவர்கள் இருவரும் அநீதியை அழித்தார்களா? மீண்டும் தங்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பினார்களா? என்பது கிளைமாக்ஸ்.

பொதுவாகவே ஜானி டெப்பின் படங்கள் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படங்களாக இருக்கும். இந்த படமும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரின் தோற்றம் ஆகட்டும், உடல் மொழியாகட்டும், பேசும் வசனங்களாகட்டும், சண்டை காட்சிகளாகட்டும் படம் முழுக்க அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டே இருக்கிறார். லோன் ரேஞ்சர் ஆகவரும் ஆர்மி ஹமர் சிறப்பான நடிப்பு, நேர்த்தியான சண்டைகாட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

படத்தில் வரும் லோகாஷன்கள் சிறப்பு அம்சம். சிறப்பான, நேர்த்தியான கலை வடிவமைப்பும் படத்தை தூக்கி நிறுத்துகிறது. அந்த ரயில் தண்டவாளங்கள் பதிக்கும் இடம், சில்வர் வெட்டி எடுக்கும் நதி என அனைத்து இடங்களும் ரசிக்கவும், வியக்கவும் வைக்கின்றன. ரயிலில் நடக்கும் ஆரம்ப மற்றும் இறுதி சண்டைக்காட்சிகள் சூப்பர். ஹன்ஸ் ஜிம்மர்-ன் பின்னணி இசையும் படத்தோடு ரசிகர்களை ஒன்ற செய்கிறது. மொத்தத்தில் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படக்குழுவினர் இணைந்து ஒரு ஆக்ஷன் பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ளனர்.