சென்னையை நெருங்கும் ஆபத்து – சுதாரிக்குமா தமிழக அரசு

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 991.47 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளில் 423 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நகருக்கு ஆபத்து சூழ்ந்துள்ளதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கடல் பகுதிகளில் சராசரியாக கடல் நீர்மட்டம் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 20 செ.மீட்டர் அளவுக்கு உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. அதீத கனமழையும், வறட்சியும் அடிக்கடி ஏற்படுகிறது. கடற்கரையில் அரிப்புகள் ஏற்படுகின்றன. கடுமையான கடல் அலை சீற்றங்களால் கடற்கரை பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இதில் கடற்கரையில் பாதிப்புகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. கடல் அரிப்பு அதிகரிக்கும் போது, அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் பாதிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 6 ஆயிரத்து 907 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரைகள் இருக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் 1,945.6 கிலோ மீட்டருக்கு கடற்கரைகள், ஆந்திராவில் 1,027.58 கிலோ மீட்டரும், தமிழகத்தில் 991.47 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளும் இருக்கின்றன.

கடல் அரிப்புகளால் கடற்கரைகளில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுகிறது. கடலில் ஏற்படும் புயல் கரையை கடந்த பின்பு, கடற்கரை பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர செயற்கையாகவும் கடல் அரிப்பு ஏற்படுகிறது. கடற்கரைகள் பகுதிகளில் நடைபெறும் துறைமுக கட்டுமான பணிகள் மற்றும் இதர கட்டிட பணிகள் கடற்கரை அரிப்பை அதிகமாக்குகிறது.

எனவே மத்திய அரசு, நாட்டில் உள்ள கடற்கரை பகுதிகளை தொடர்ந்து கண்காணித்திருக்கிறது. அதில் குஜராத் கடற்கரையில் அதிகளவு மண் அரிப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 537.5 கிலோ மீட்டர் அளவுக்கு கடற்கரை பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தமிழகத்தில் மட்டும் 422.94 கிலோ மீட்டர் அளவுக்கு கடற்கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இது தமிழகத்தின் மொத்த கடற்கரையில் 43 சதவீதம் ஆகும். மேலும் தமிழகத்தின் 332.69 கிலோ மீட்டர் தூர கடற்கரைகள் நிலையான தன்மையுடன் உள்ளது. 235.85 கிலோ மீட்டர் தூர கடற்கரை பகுதிகள் மண் அரிப்புக்கு எதிரான மண் குவிப்பு இருக்கிறது.

மண் அரிப்பு காரணமாக, கடலின் நீர் மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் நடத்தப்பட்ட பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வின்படி, தமிழ்நாட்டில் திருவாரூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கடல் பகுதிகளில் சராசரியாக கடல் நீர்மட்டம் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 20 செ.மீட்டர் அளவுக்கு உயரலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேவேளையில் இந்தியாவில் கடல் நீர்மட்டம் உயர்வால் சென்னையும், கொல்கத்தாவும் 2,100-ம் ஆண்டின் போது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில் பாதிப்பு என்பது தற்போதைய அளவீடுகளை வைத்து நீர்மட்டம் உயரும் அளவு வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், அதில் பருவ நிலை மாற்றத்தால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்தால் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்கிறார்கள்.

Leave a Response