ஆனந்த் அம்பானி தனது திருமணத்தில் தலையில் அணிந்திருந்த தலைப்பாகையின் விலை என்ன தெரியுமா? அவர் அணிந்திருந்த ஆடை கூட முழுக்க முழுக்க கைகளால் நெய்யப்பட்டு நேர்த்தியான கற்கள் பதிக்கப்பட்டிருந்தது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்து நிறுவன அதிபர் வீரேன்- ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இரு நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்த திருமண நிகழ்வுக்கு ரூ 5000 கோடி வரை செலவிடப்பட்டதாக தெரிகிறது. அதாவது முகேஷ் அம்பானியின் சொத்தில் 0.5 சதவீதம் செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்படமுக்கிய இந்திய அரசியல் தலைவர்களுக்கும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி,மாலத்தீவு உட்பட உலக நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திருமணத்தில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜி மும்பைக்கு வந்தடைந்தார். திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரகுமான், கிரிக்கெட் வீரர் தோனி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, பாடகர்கள் அடில் லானா டெல் ரே, டிரேக், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான பி.கே.சியில் உள்ள ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் நடந்தது. மணமகன் ஆனந்த் அம்பானி சிவப்பு, தங்க நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். மணமகள், மணமகன் மட்டுமல்லாமல் விருந்தினர்களும் கண் கவர் ஆடம்பர உடைகளை அணிந்திருந்தனர்.
பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற ஆசி வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதற்காக பி.கே.சி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் உடை குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
ராதிகா, அபு ஜானி சந்தீப் கோஸ்லா டிசைன் செய்த ஆடையை தனது திருமண விழாவில் அணிந்திருந்தார். அவருடைய பனேட்டர் எனப்படும் நுணுக்கமான வேலைப்பாடுகள் அந்த ஆடையில் வெளிப்பட்டது. மணப்பெண்கள் சிவப்பு, வெள்ளை நிறத்தில் திருமண ஆடை அணிவது பாரம்பரியமாகும். அவர் தலையில் அணிந்திருந்த 5 மீட்டர் நீளமுள்ள முக்காடு, அவர் தோளில் அணிந்திருந்த டிஷ்யூவால் ஆன துப்பட்டா, அதிலிருந்த சிவப்பு நிற வேலைப்பாடுகள் அவர் ஆடையின் அழகை மெருக்கேற்றியது.
அவர் உடையில் இருக்கும் சிவப்பு பார்டர்கள் ஆடையின் அழகை அள்ளிக் கொடுத்தது. ஆடையின் வேலைப்பாடுகளில் நக்ஷி, சாடி, ஜர்தோஷி உள்ளிட்டவை இருந்தன. கையால் எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க செய்யப்பட்ட நுணுக்கமான மலர் வடிவ டிசைன் கொண்ட செருப்பை அணிந்திருந்தார்.
இந்த திருமண விழாவில் பங்கேற்ற அம்பானி குடும்பத்தினர் மட்டுமே பல நூறு கோடிகள் மதிப்பிலான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருந்தனர். இந்த நிலையில் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த ஒரு அணிகலன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது kalgi எனப்படும் ஆபரணங்கள், ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் அணிந்து கொள்ளப்படும் ஒரு அணிகலன் என கூறப்படுகிறது. பொதுவாக ராஜாக்களின் தலைப்பாகையில்தான் இந்த அணிகலன் இருக்குமாம். இதில் அரிய வைரங்களால் உருவாக்கப்படும் இந்த அணிகலனை அணிந்து தனது திருமணத்தில் அசத்தியிருந்தார். அவர் அணிந்திருந்த அந்த தலைப்பாகையின் விலை மட்டும் ரூ 160 கோடி என சொல்லப்படுகிறது.