வதந்தி – திரைவிமர்சனம்

வதந்தி- வேலோனியின் கட்டுக்கதை என்ற வெப் தொடரை ஆன்ட்ரு இயக்கியுள்ளார். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இத்தொடரை இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரித்து உள்ளார்கள் .

கன்னியாகுமரி மாவட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் அந்த படத்தின் ஹீரோயின் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப் படுகிறார். மீடியாவில் இந்த செய்தி வேகமாக பரவுகிறது. திடீரென இறந்த பெண் மீடியாவில் தோன்றி நான் இறக்கவில்லை உயிருடன் நலமாகவுள்ளேன் என காணொளியை பதிவிட.

கொலை செய்யப்பட்டது யார் என போலீஸ் விசாரணை செய்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகான இளம் பெண் வேலோனி தான் படுகொலை செய்யப்பட்ட பெண் என கண்டுபிடிக்கிறது காவல் துறை. காவல் துறையின் விசாரணையில் திருப்தி அடையாத மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி விரைவாக வழக்கை முடிக்க சொல்கிறார்.

இதனால் விவேக் (எஸ் ஜெ சூர்யா) என்ற அதிகாரியை நியமிக்கிறது காவல் துறை. விவேக், இறந்த பெண் திருமணம் செய்து கொள்ள இருந்த இளைஞனை விசாரிக்கிறார். ஒத்தமலை பகுதியில் தான் இந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என எண்ணி அந்த பகுதியில் உள்ள சில தடயங்களையும், மனிதர்களையும் சந்தேகிக்கிறார் விவேக்.

ஒரு கட்டத்தில் ஒரு புள்ளியில் நிற்கிறது வேலோனியின் கேஸ். வேலோனியை பற்றி செய்தித்தாள் ஒன்று மிக மோசமான செய்திகளை தருகிறது. அந்த வதந்திகள் காட்டுத்தீயாய் பரவ, அதை அனைத்தாரா விவேக்? என்பது இத்தொடரின் தொடர்கதை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான அளவில் உள்ள கிறிஸ்தவ மக்களின் பின் புலத்தில் இந்த கதை சொல்லப் பட்டிருக்கிறது. படத்தில் வரும் பெரும்பான்மையான பெயர்கள் கிறித்துவ பெயர்களாக உள்ளது.

அழகு, நடிப்பு, கண்களில் ஒரு குழந்தைத் தனம் என முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை தந்துள்ளார வேலோனியாக நடிக்கும் சஞ்சனா. தமிழ் சினிமா இவரை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

SJ சூர்யா காக்கி உடைக்குள் ஒரு கனிந்த மனம் உடையவராக நல்ல நடிப்பை தந்துள்ளார். குறிப்பாக இறுதி எபிசோடில் கோவப்படும் காட்சி. மனைவியிடம் குடித்துவிட்டு உரையாடல் செய்யும் காட்சி என பிச்சி உதறிட்டாரு பா…

நாசர் எழுத்தாளராக பொருந்தி போகிறார். லைலாவிற்கு இது ரீ என்ட்ரி என்று சொல்லலாம். தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு பெண் சகஜமாக சிரித்து பேசுவதை இன்னமும் பக்குவமாக பார்க்க முடியாத சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை “வதந்தி” வெப்தொடர் ஆழமாக சொல்கிறது.

மேலும், நமது நாட்டில் ஒரு பெண் அதுவும் அழகான பெண்ணாக இருந்து மர்மமான முறையில் இறந்து போனால் நமது நாட்டு மீடியாகளில் சில இந்த மரணத்திற்கு பின் உள்ள உண்மையை கண்டு பிடிக்கிறோம் என்ற பெயரில் இறந்த பெண்ணை பற்றி பல தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் இறந்த பெண்ணின் பெயருக்கும், அவரது குடும்பத்திற்கும் களங்கம் ஏற்படுகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது “வதந்தி”.

வதந்தி – சமூகத்தின் உண்மை.

Leave a Response