ரயில் பயணிகள் மீது தொடரும் கல் அடி, கண்டுக்கொள்ளாத ரயில்வே பாதுகாவலர்கள்:

நேற்று (21 நவம்பர், 2014) இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7:30 மணிக்கு புறப்பட்ட அரக்கோணம் விரைவு மின்தொடர் வண்டி பெரம்பூர் லோகோ – வில்லிவாக்கம் ரயில்நிலையங்களுக்கு இடையே சுமார் 08:00 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் சென்றுகொண்டிருந்த தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த சில அடையாளம் தெரியாத நபர்கள், ரயில் மீது கற்களை கொண்டு தாக்கினர்.

இந்த சம்பவத்தில் ஜன்னல் இறுக்கையில் அமர்ந்துகொண்டிருந்த அரக்கோணத்தை சேர்ந்த ஆண்ட்ரூ (ஆன், வயது 26) என்பவர் கண் அருகே ஒரு பெரிய கல் வந்து தாக்கியுள்ளது. இதில் ஆண்ட்ரூ காயம்பட்டுள்ளார். இதனால் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மற்ற பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக சென்னை சென்ட்ரல் – பெரம்பூர் மற்றும் சென்னை கடற்க்கரை – பெரம்பூர் ஆகிய வழித்தடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதைப்பற்றி ஆண்ட்ரூ மற்றும் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்கத்தில் செல்லும் இதர பயணிகளிடம் விசாரிக்கையில் இந்த சம்பவங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ரயில் மார்க்கங்களிலும் தொடர்ந்து நடைப்பெருவதாக தெரிவித்தனர். இதை விட அதிர்ச்சி தரும் விஷயம் அவர்கள் கூறுவது, இந்த ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பயணிகள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது வழக்கம். அத்தகைய நேரங்களில், ரயில் செல்லும் தண்டவாளம் அருகில் இத்தகைய அடையாளம் தெரியாத நபர்கள் படிக்கட்டுகளில் பயணிக்கும் பயணிகள் மீது கல் வீசுவது மற்றும் நீண்ட கொம்பினால் அடிப்பது வழக்கம் என்றும், அப்போது அந்த பயணி பதற்றத்தில் தன் கையில் இருக்கும் கைபேசி (செல் போன்) மற்றும் கைப்பைகளை கிழே போட்டுவிடுவார்கள். ரயில் சென்ற பிறகு இந்த கொள்ளையர்கள், பயணிகள் கிழே போட்டு சென்ற பொருட்களை எடுத்து செல்வது வழக்கம் என்றனர்.

இத்தகைய ரயில் கொள்ளையர்களுக்கும், கொடூர குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். ரயில்களில் கொள்ளையடிக்கப்படும் இத்தகைய கைப்பேசிகள், அதில் இருக்கும் சிம் கார்டுடன் கொடூர செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக சக பயணிகள் பேசிக்கொள்வதாக தெரிவித்தனர்.

இத்தகைய சம்பவங்கள் பல முறை நடந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் ரயில்வே பாதுகாப்பு படையிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால் அந்த புகார்களுக்கு பரிகாரமாக சில நாட்கள் மட்டுமே இந்த அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு, மீண்டும் தொடர்கிறது என்றும் தெரிவித்தனர் சில பயணிகள்.

ரயில் பயணிகள் இத்தகைய ஆபத்துக்களிலிருந்து எப்போது காப்பாற்றப்படுவார்கள் என்பது ரயில்வே பாதுகாவலர்களுக்குத்தான் வெளிச்சம். ரயில்வே நிர்வாகமும், ரயில்வே பாதுகாப்பு படையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு, இத்தகைய கொடூர செயல்களுக்கும், கொள்ளைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க ஏதுவாக இருக்கும்.