தண்ணி வண்டி – திரை விமர்சனம்

இயக்குநர் – மாணிக் வித்யா
நடிகர்கள் – உமாபதி, சம்ஸ்கிருதி

கதை – மதுரையில் தண்ணி வண்டி தள்ளி வேலை பார்க்கும் நாயகனுக்கும், மதுரைக்கு வரும், புதிய வருவாய்துறை அதிகாரிக்கும் ஒரு பிரச்சனை ஆரம்பிக்கிறது. அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதே கதை.

நாயகன் உமாபதி, நண்பன் பாலசரவணன் உடன் சேர்ந்து, மதுரை நகரில் தண்ணீர் சப்ளை செய்யும் வேலையைச் செய்து வருகின்றார்கள். இந்த நேரத்தில் மதுரைக்குப் புதிதாக வரும் வருவாய்த்துறை பெண் அதிகாரிக்கும் இவர்களுக்கும் பிரச்சனையாகி முட்டிக்கொள்கிறது.
மக்களுக்கு நல்லது செய்யும் அந்த அதிகாரிக்கு, செக்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அவரது வீடியோ எதிர்பாராமல் வெளியாகிவிடுகிறது. இதில் வில்லன் கும்பலுக்கும், அதிகாரிக்கும், நாயகனுக்கும் இடையில் ஒரு விளையாட்டு ஆரம்பிக்கிறது. முடிவில் என்ன ஆகிறது என்பதே படம்.

உண்மையில் நாயகன், தண்ணி வியாபாரம் செய்வதால் இந்த தலைப்பா இல்லை படம்
முழுக்க தண்ணி அடித்து கொண்டு சுற்றுவதால் இந்த தலைப்பா ? உண்மையில் இந்தப்படத்தையே தண்ணி போதையில் எழுதியது போல் தான் இருக்கிறது.

படம் முழுக்க தண்ணி அடிப்பதும், பெண்ணின் செக்ஸ் பழக்கத்தை போதையாக காட்டுவதும் தேவைதானா?

தம்பி ராமையாவின் நிஜ மகன் உமாபதி படத்திலும் அவரது மகன். ஒரு நாயகனுக்குண்டான அனைத்து அம்சங்களும் அவரிடம் இருக்கிறது. காதல், காமெடி, சண்டைக்காட்சி அனைத்திலும் மிளிர்கிறார். ஆனால் அவர் கதையை ஒழுங்காக தேர்ந்தெடுக்காவிடில், விரைவில் காணமால் போய்விடுவார். இந்தப்படத்தில் பாலசரவணனுடனும், அவரது அப்பாவுடனும் சேர்ந்து உமாபதி செய்யும் காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது. 

வித்யூலேகா, தேவ தர்ஷினி தங்களுக்கு தந்ததை சரியாக செய்துள்ளார்கள்.
சம்ஸ்கிருதிக்கு உமாபதியை காதலிப்பதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

படம் முழுக்க எல்லோரையும் விட அதிகம் முன்னணியில் இருப்பது அதிகாரியாக வரும் வினிதா தான். உண்மையில் படத்தில் கொஞ்சம் கவர்வது இவர்தான். ஆனால் இவரது கதாப்பாத்திரத்தை பல விதங்களில் கேவலப்படுத்தி எழுதி வில்லியாக மாற்றி நோகடித்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பத்தில் இருந்து, இறுதி வரையிலும், கதையில் என்ன நடக்கிறது என்பதே பெரும் குழப்பமாக இருக்கிறது. திரைக்கதையில் ஒரு தொடர்ச்சியே இல்லை. சுவாரஸ்யமும் இல்லை. படத்தை எடுக்கும் நேர்த்தியில் இயக்குநர் மாணிக்க வித்யா கவனம் செலுத்தி இருக்கலாம்.

தண்ணி வண்டி சமூகத்திற்கு தேவையற்ற சரக்கு வண்டியாக மாறிவிட்டது.

Leave a Response