கல்நெஞ்சை கரையவைக்கும் ஜெய் பீம் – திரை விமர்சனம்

‘ஜெய் பீம்’ படம் மட்டும் இல்லை, ஒரு உண்மை சம்பவத்தின் ஆவணம். காவல் துறையினரின் மனித உரிமை மீறல், பழங்குடியினர் மீதான பொய் வழக்கு, அத்துமீறிய தாக்குதல் என 1995ம் வருடத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்கப்பட்டது தான் இந்த ஜெய் பீம்.

1995ம் ஆண்டு ஒரு ஊர் பெரியவர் வீட்டில் திருடு போகிறது, அந்த திருட்டு சம்பவத்திற்காக அப்பாவி இருளர்களை காவல் துறை கைது செய்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும். அதில் பெண்கள் இருவர், காவல் துறையின் மானபங்கம் மற்றும் கொடுமைக்கு ஆளாகி அனுப்பப்படுகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆண்கள் மூவர், காவல் துறையின் பொய் வழக்கினால் எப்படி கொடுமைகளை அனுபவித்தனர், பிறகு அவர்களுக்காக ஒரு வழக்கறிஞர் எவ்வாறு நேர்மையாக அவர்கள் விடுதலைக்கு பாடுபடுகிறார்! அந்த மூன்று ஆண்களும் விடுதலை ஆகிறார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.

இருளர்களில் முதன்மை கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்துள்ளார்! சாரி வாழ்ந்துள்ளார். அவருடைய ஒவ்வொரு அசைவு, வசனங்களின் உச்சரிப்பில் எதார்த்தம், பாம்பு பிடிப்பு காட்சியில் அவருடைய ஈடுபாடு என அனைத்தும் அட்டகாசம். இருளராகவே வாழ்ந்துள்ளார் மணிகண்டன். அவருடைய மனைவியாக லிஜாமோல் ஜோஸ் நடித்துள்ளார்! சாரி அவங்களும் இருளராகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். என்ன ஒரு அபார நடிப்பு. இவருடைய ஒவ்வொரு அசைவு, செய்கை, அழுகை, காதல் சிரிப்பு என அனைத்திலும் தன்னுடைய நடிப்பில் அசத்தியுள்ளார் இந்த லிஜாமோல் ஜோஸ். காவல் துறை துணை ஆய்வாளராக நடித்துள்ள தமிழரசன் அருமையான நடிப்பு. அறிவொளி இயக்கம் டீச்சராக வரும் ரெஜிஷா விஜயனின் நடிப்பு பாராட்டுதலுக்குரியது. மற்றப்படி பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு தங்களுடைய நடிப்பில் எப்போதும் போல் நியாயம் செய்துள்ளனர்.

இவர்களை எல்லாம் குறிப்பிட்ட நான், படத்தோட நாயகன் சூர்யாவை பற்றி பேசவே இல்லையே என்று நீங்கள் மனதில் யோசிப்பது புரிகிறது!

நம்ம சூர்யா நடிப்பு எப்போதும் போல் அசத்தல் தான். ஆனால் இந்த படத்தில் ஹைலைட் என்னவென்றால் அவர் வழக்கறிஞராகவே வாழ்ந்துள்ளார். அதுவும் ஒரு சராசரி வழக்கறிஞராக இல்லை, அன்று எப்படி அந்த ஒரிஜினல் வழக்கறிஞர் சந்துரு எதார்த்தமாக ஏழை எளிய மக்களுக்காக பணியாற்றி பின்னர் ஒரு நீதிபதி ஆனாரோ, அவரை போலவே எதார்த்தமான ஒரு கதாபாத்திரமாகவே நடிப்பில் அசத்தியுள்ளார் சூர்யா. மொத்தத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு முன்னணி கதாநாயகனும் துணிந்து நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. ஹேட்ஸ் ஆப் சூர்யா. I appreciate your guts for producing and acting in this film.

கதிரின் ஆர்ட் டைரக்ஷன் எக்சலேண்ட். பூர்ணிமா ராமசாமியின் காஸ்டியும் டிசைன் பர்பெக்ட். பட்டணம் ரஷீதின் ஒப்பனை பாரட்டுதலுக்கு உரியது. எஸ்.ஆர் கதிரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் இந்த படத்திற்கு ஒரு ப்ளஸ் என்பதைவிட இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் செத்துகியது மட்டுமின்றி ஒவ்வொரு நடிகர், நடிகைகளிடம் காட்சிகளின் வலிமையை எடுத்துச்சொல்லி அவர்களிடமிருந்து நேர்த்தியான நடிப்பினை வாங்கியுள்ளார் இயக்குனர் த.செ. ஞானவேல். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அதில் நடித்துள்ள குழந்தைகளிடம் எப்படி அந்த எதார்த்தமான நடிப்பை அவர்களுடமிருந்து வெளி கொண்டுவந்தார் என்பது தான் ஆச்சரியம். நீதிமன்ற காட்சிகள் அடங்கியுள்ள இந்த நேர்த்தியான கோர்ட் டிராமா திரைப்படத்தை, சற்றும் தொய்வு ஏற்படாதபடி படத்தொகுப்பினை செய்துள்ளார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.

இறுதியாக சொல்லவேண்டும் என்றால் இத்தகைய ஒரு படத்தை துணிந்து தயாரித்த சூர்யா மற்றும் ஜோதிகாவை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். வாழ்த்துகள் சூர்யா & ஜோதிகா.

அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு படமே இந்த கல்நெஞ்சை கரையவைக்கும் ‘ஜெய் பீம்’.

டோன்ட் மிஸ் இட்! வாட்ச் இட் ஆன் அமேசான் ப்ரைம் வீடியோ!!

Leave a Response