ஈஸ்வரனுக்கே தொடரும் சோதனை!

சிம்பு(எ)சிலம்பரசன் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் கொரோனா காலகட்டத்தில் உருவான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இப்படத்தை மதவ் மீடியா சார்பாக பாலாஜி காப்பா தயரித்துள்ளார். குறுகிய காலத்தில் தயாரான இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த மாதம் 14ம் தேதி வெளியாக தயார் நிலையில் உள்ளது. ரிலீஸ் தேதி அறிவிப்புடன் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘ஈஸ்வரன்’ படத்தின் நாயகன் சிம்பு, இரு வருடங்களுக்கு முன்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்(AAA)’ எனும் படத்தில் நடித்து, அப்படம் வெளியானது. இப்படத்தில் சிம்பு சரியாக ஒத்துழைக்காமல், படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்த காரணத்தினால், இப்படத்தின் செலவு எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகியது. படம் வெளிவந்தும், படத்தின் வருமானம், படத்தின் செலவை ஈடுகட்ட முடியவில்லை. இதன் காரணமாக அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.

AAA திரைப்படம் வெளிவரும் முன்னர், சிம்பு மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இருவரும், படத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக செலவை பற்றி பேசியுள்ளனர். அப்போது சிம்பு, மைக்கேல் ராயப்பனுக்கு அடுத்து ஒரு படத்தை இலவசமாக நடித்து தருவதாக வாக்கு கொடுத்துள்ளதாக மைக்கேல் ராயப்பன் சொல்கிறார். இதன் இடையே ஏற்பட்ட பிரச்சனையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்களும் பேசி சமரசம் செய்தனர். அந்த சமரசத்தின்படி, சிம்பு AAA தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனுக்கு வேறு ஒரு படம் நடித்து தரவேண்டும் என்று பஞ்சாயத்து செய்து முடித்து வைக்கப்பட்டது.

சிம்பு முன்பு போட்ட சமரச ஒப்பந்தம்படி, மைக்கேல் ராயப்பனுக்கு படம் நடித்து தராமல் வேறு படங்களில் நடித்து வந்தார். அப்போது சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படம் வெளியாக இருந்தது. இது சம்மந்தமாக அப்போதே, தமிழ் திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தை முறையிட்டார் மைக்கேல் ராயப்பன். பஞ்சாயத்து பேசிய இரு சங்கங்களும் சிம்புவிடம் பேசினர். பஞ்சாயத்தின் முடிவாக சிம்பு அடுத்து நடித்து வெளியாகும் படம் வெளியாவதற்கு முன்பு மைக்கேல் ராயப்பனுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று பேசி முடித்தனர்

ஆனால் தற்போது வரை சிம்பு, மைக்கேல் ராயப்பனுக்கு பணத்தை தரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் இது சம்மந்தமாக சிம்புவிடம் பேசியும், சிம்பு ஒத்துவராத காரணத்தினால், இப்படம் வெளியிடும் பணியை தற்போது நிறுத்தி வைக்கும்படி தமிழ் திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் ‘Qube’ என்ற டிஜிட்டல் சர்விஸ் ப்ரோவைடருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

சிம்புவின் இந்த AAA பிரச்சனை காரணமாக அவர் நடித்து தயார் நிலையில் உள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திட்டமிட்ட தேதியில் இந்த பொங்கல் விடுமுறையில் வெளியாகுமா என்ற சந்தகம் எழுந்துள்ளது. சிம்புவின் AAA படம் பிரச்சனை சம்மந்தமாக, இன்று மாலை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தமிழ் திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

சிம்புவின் இந்த போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளது சிம்பு அல்ல, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி காப்பா மற்றும் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிடும் 7ஜி சிவா ஆகியோரே. சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘ஈஸ்வரன்’ திரைப்பட இசை வெளியீட்டி விழாவில் பேசிய சிம்பு, இனி பழைய மாதிரி அவர் இருக்க போவதில்லை என்றும், இனி தொடர்ந்து அவருடைய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் என பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் தற்போதோ வேதாளம் முருங்கை மரம் ஏறியதை போல் சிம்பு நடந்து கொள்கிறார் என கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

‘ஈஸ்வரன்’ படம் ரிலீஸ் பிரச்சனை பற்றி அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அருணனிடம் விசாரித்தோம். ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இப்படம் திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என சொன்னார்.

ஈஸ்வரனுக்கே தொடரும் சோதனை விரைவில் முடிவுக்கு வந்தால், பொங்கலுக்கு திரைத்துறையும் செழிப்பாக இருக்கும், சிம்புவின் ரசிகர்களும் உற்சாகமாக இருப்பார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response