மூவாயிரம் துணை நடிகர்கள் கொண்டு எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி

கொரோனாவுக்கு பிந்தைய தமிழ்சினிமா வெகுவாக சகஜ நிலைக்கு திரும்ப முயன்று வருகிறது. படப்பிடிப்புகள் அரசு கூறிய முறைப்படி பாதுகாப்பாக நடந்து வருகிறது. வெளிப்புற படப்பிடிப்புகளும் முழுவீச்சில் துவங்கியுள்ளது. ‘

“குற்றம் 23” படத்திற்கு பிறகு அருண் விஜய் – அறிவழகன் இணைந்திருக்கும் படம் #AV31, அதிக பொருட்செலவில் தயாராகிறது. ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தில் அருண்விஜய்யுடன் ரெஜினா, புதுமுகம் ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் பகவதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் பிரமாண்டமாக நடந்துள்ளது. சுமார் 3000த்துக்கும் மேலான துணை நடிகர்கள் கொண்டு ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. நாயகன் – நாயகி உட்பட 3000 பேருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான இப்படத்தில் தயாரிப்பாளருக்காக கொரோனாவை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை முடித்து தந்துள்ள அருண் விஜய் கூறுகையில், “எப்போதுமே சினிமா ஒரு கூட்டு முயற்சிதான். இந்த இக்கட்டான சூழலில் இப்படத்தை முடிப்பதில் எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குநர், நாயகி ரெஜினா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. அறிவழகனின் படங்களில் அடுத்தக்கட்ட படமாக இப்படம் இருக்கும். இந்த தைத்திருநாள் நம் தமிழ் சினிமாவுக்கு புது பாய்ச்சலை தரும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Leave a Response