பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது.
சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலால் அவர் இயக்கி வந்த “சூரப்பனகை” படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, “சூர்ப்பனகை” தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள். இந்த உணர்வுப்பூர்வமான த்ரில்லர் படத்தில் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குறைந்த நடிகர்கள் எனும் போது, நல்லதொரு தொழில்நுட்பக் குழு அமைந்தால் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அந்த வரிசையில் தனது தொழில்நுட்பக் குழுவினர், படக்குழு மற்றும் கதைக்களம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜுவிடம் கேட்ட போது, “வேல்ராஜ் சார் (ஒளிப்பதிவாளர்), திலிப் சுப்பராயன் (சண்டைப் பயிற்சியாளர்), சாம் சிஎஸ் (இசையமைப்பாளர்), சாபு ஜோசப் (எடிட்டர்) மற்றும் நான், நாங்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். குறைவான படக்குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதி பெற்றோம். என்னுடைய ‘சூர்ப்பனகை’ படத்தை தயாரித்த ராஜ்சேகர் வர்மா இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று தொடங்கவுள்ளது.
இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் “கைதி” படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் ராஜு.
விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக பார்வையாளர்களை அடுத்தக் காட்சி என்ன என்று யூகிக்க முடியாத நிலையிலும், அதே வேளையில் நல்ல காமெடியுடனும் இந்த த்ரில்லர் இருக்கும் என்கிறது படக்குழு.