கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
மதுரை மாடக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு எதிா்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுரக் குடிநீா் ஆகியவற்றை வழங்கினாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் தவிா்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. பணப்புழகத்தைக் கொண்டு வரும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நடவடிக்கையாக மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.5000 கடனுதவி அளிக்கப்படுகிறது. முதல் 6 மாதங்களுக்கு இதற்கான தவணையைச் செலுத்த வேண்டியதில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஓராண்டில் திருப்பிச் செலுத்தும் வகையில் கடனுதவி அளிக்கப்படுகிறது.
அதேபோல, சாலையோர வியாபாரிகள், தேநீா் கடை நடத்துவோா், காய்கனி வியாபாரிகள் உள்ளிட்ட சிறுவணிகா்களுக்கு உதவும் வகையில் கூட்டுறவு வங்கிகள் ரூ.50 ஆயிரம் தனிநபா் கடன் வழங்கப்படுகிறது. ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் இந்த கடனுதவி அளிக்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் 1.88 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரா்களில் 98.69 சதவீதம் பேருக்கு அரசின் உதவித் தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது என்றார்.