கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்

துல்கர் சல்மான், ரிதுவர்மா, ரக்‌ஷன் நடிப்பில் அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”.

அப்படியா ..?? அப்படி ஒரு படம் வந்திருக்கா.??ன்னு யாராவது கேட்டா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது…

சரி, விமர்சனத்துக்கு போகலாம்…

நாயகனாக வரும் துல்கர் சல்மானும், ரக்‌ஷனும் நண்பர்கள். App டெவலப்பர் என்று சொல்லிக் கொண்டு ஆன்லைன் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வசதியான, சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் இருவரும்.

துல்கர் சல்மானுக்கு ரிது வர்மா மீது காதல் வர, ரக்‌ஷனுக்கோ நிரஞ்சனி மீது காதல் வருகிறது. நால்வரும் இணைந்து வெளியூர் சென்று வாழ்க்கையை நடத்த திட்டமிடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான், ஆன்லைன் திருட்டு வழக்கை கையில் எடுத்து தீவிரமாக விசாரிக்க துவங்குகிறார் போலீஸ் அதிகாரி கெளதம் வாசுதேவ் மேனன்.

இந்த வழக்கு தொடர்பாக துல்கர் சல்மான் மற்றும் ரக்‌ஷன் இருவரையும் கெளதம் வாசுதேவ் மேனன் நெருங்கி வரும் வேலையில் தான் அந்த திருப்பம் ஏற்படுகிறது. அதிலிருந்து படம் வேகம் எடுக்க, அடுத்த என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.

துல்கர் சல்மான் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்தாலும், இந்த படம் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தரும். ஒரு நல்ல படம் யார் தடுத்தாலும், எவர் என்ன செய்தாலும் ஒன்று செய்துவிட முடியாது என்பதற்கு இப்படமே ஒரு சான்று தான்.

அளவெடுத்து செதுக்கியது போல் மிகவும் யதார்த்தமான நடிப்பில் அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டார் துல்கர். அதுமட்டுமில்லாமல், மிகவும் ஸ்டைலிஷாக தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நடித்து வந்த ரக்‌ஷன், இப்படத்தில் ஹீரோவுடன் முழுப்படத்திலும் தோன்றி பிரமாதப்படுத்தியிருக்கிறார். காமெடியை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று அனைவரையும் குதுகலப்படுத்தியிருக்கிறார் ரக்‌ஷன். இவர் தோன்றும் காட்சிகள் திரையரங்குகளில் சிரிப்பலைகளை அள்ளி தெளிக்க வைத்திருக்கிறது. நிச்சயம் இன்னும் பெரிய உயரம் எட்டுவார்.

நாயகி ரிது வர்மா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார், தனது நடிப்பையும் அழகாக கொடுத்திருக்கிறார். நாயகியின் எண்ட்ரீ, இரண்டு பாடல்கள் என்ற மசாலா திரைப்படம் போல் இல்லாமல், கதையின் முக்கியமான திருப்புமுனையாக இருந்து கதையோட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நாயகி.

ரக்‌ஷனின் ஜோடியாக வரும் நிரஞ்சனியின் நடிப்பும் பேசப்படும்… அமைதியான பார்வையில் தோன்றி மிரட்டலான குரலில் ரசிகர்களை தன்வசப்படுத்துகிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன், இவரது தோற்றத்திற்கும் பின்னனி இசைக்கும் மாஸான ஒரு சில காட்சியை வைத்து மிரட்டி எடுத்திருக்கிறார் இயக்குனர்.

கே எம் பாஸ்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்… ஒவ்வொரு காட்சியிலும் இருந்த மெனக்கெடல், கைதட்டலை கொடுக்க வைத்து விட்டார் ஒளிப்பதிவாளர்.

மசாலா காஃபி & ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இவர்களது இசையில் பாடல்களும் சூப்பர், பின்னனி இசையும் மிரட்டல் தான். ஒரு பிரம்மாண்ட படத்திற்கு இணையான பின்னனி இசையை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

வசனங்கள், கதை, திரைக்கதை என்ற அனைத்தையும் மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி.

பல வருடத்தின் உழைப்பை சரியான முறையில் பயன்படுத்தி, ரசிகர்களுக்கு அதை கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனராக நிச்சயம் உயருவார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – ரசிக்கலாம்.

Leave a Response