புதிய பாடகரை அறிமுகப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் டி.இமான் புதிய திறமைகளை கண்டுபிடித்து இசையுலகுக்கு அறிமுகப்படுத்தி, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ஆர்வம் மிக்கவர். அவரது ஆச்சரியப்படத்தக்க சமீபத்திய கண்டுபிடிப்புதான் திருமூர்த்தி. ஜீவா நடிக்கும் ‘சீறு’ படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமாகும் திருமூர்த்தி, இனிய குரல் வளமும், திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அருமையான இசை வடிவில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை பார்வதி எழுதியிருக்கிறார். இது குறித்து பார்வதி தெரிவித்ததாவது,
“பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ற பாடல்களை இதுவரை நான் எழுதியிருக்கிறேன். ஆனால் ‘சீறு’ படத்துக்காக எழுதிய பாடலை விசேடமான அனுபவம் என்றுதான் கூற வேண்டும். திறமை மிக்க அறிமுக பாடகர் திருமூர்த்தி பாடிய இந்தப் பாடலை நான் எழுதியிருப்பதை எனக்குக் கிடைத்த கெளரவமாகவே நினைக்கிறேன். ‘ஜில்லா’ படத்துக்காக இமான் இசையில் நான் எழுதிய “வெரசா போகயிலே…” பாடலுக்குப் பிறகு இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறேன். உண்மையில் பாடலின் ட்யூனுக்குள் வார்த்தைகளை அடக்குவது என்பது கடினமான பணி என்றாலும், இமானின் அழகான ட்யூனுக்கு, ஆழமான பாடல் வரிகள் கன கச்சிதமாகப் பொருந்தி சிறப்பாக அமைந்துவிட்டது.
பாடல் வரிகளைக் கேட்டதுமே இசையமப்பாளர் இமானும், இயக்குநர் ரத்தின சிவாவும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக பாடகர் திருமூர்த்தி அனுபவித்து, இந்தப் பாடலைப் பாடியிருப்பதுதான் பாடலின் சிறப்பம்சமே. பாடல் பதிவு முடிந்ததும், திருமூர்த்தி தனக்குப் பிடித்த வரிகள் என்று சிலவற்றைச் சொல்லி பாடிக் காட்டியபோது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்து இமையமைப்பாளர் இமானுடன் இசைப் பயணத்தைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று நெகிழ்ந்து பேசினார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரத்தின சிவா இயக்கும் ‘சீறு’ படத்தில் ஜீவா, ரியா சுமன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். நவ்தீப் எதிர்மறை வேடத்தில் நடிக்க, காயத்ரி கிருஷ்ணா மற்றும் சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எதிர்வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகெங்கும் திரைக்கும் வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave a Response